×

பைக்கில் வந்தபோது சீட் பெல்ட் அணியாததால் ரூ.1,200 அபராதம்

ஈரோடு,  பிப்.13: ஈரோடு மாநகரில் வடக்கு, தெற்கு  போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், தெற்கு போக்குவரத்து போலீஸ்  எஸ்.ஐ. விஜயகுமார் நேற்று முன்தினம் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக ஆம்புலன்சில் வந்த ஈரோடு சடையம்பாளையம் குறிஞ்சி நகரை சோ்ந்த  முருகேசன் மகன் சரவணக்குமாருக்கு (27) இ-சலான் கருவி  மூலம் ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது. சரவணக்குமார் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் நோயாளிகள் உள்ளே இல்லாமல் அதிக  சத்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்தியதாகவும், சீட் பெல்ட்  அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்ததாகவும், முறையான சீருடை இல்லாமல் வாகனத்தை  ஓட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்து இந்த அபராதத்தை எஸ்.ஐ. விதித்துள்ளார். ஆனால், இந்த அபராத தொகையை சரவணக்குமார் செலுத்த மறுத்து சென்றதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இ சலான்களை ஆய்வு செய்யும் அதிகாரி எஸ்.ஐ. விஜயகுமார் போட்ட வழக்கை சோதனை  செய்தார். அப்போது சரவணக்குமார் பைக்கில் வந்ததாகவும், அப்போது அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றும் வழக்குப்பதியப்பட்டிருந்தது. மேலும் அந்த பைக் திருச்சி மாவட்டம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு  சொந்தமானது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரி எஸ்.ஐ. விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது எஸ்.ஐ. விஜயகுமார்  இ சலான் கருவியில் தவறுதலாக மாற்றி பதிவிட்டுள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் இந்த தகவலை வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியுள்ளது. டூவீர்ல போனாலும் சீட் பெல்ட் கேட்கிறது ஈரோடுதான் என்றும் இன்னும் பல மீம்ஸ்களிலும் பலர் பதிவிட்டுள்ளனர்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி