×

பொள்ளாச்சி அருகே ஓட்டலில் போதையில் தகராறு செய்த 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

பொள்ளாச்சி,பிப்.13:   பொள்ளாச்சி அருகே ஓட்டலில் போதையில் தகராறு செய்த 3 போலீசாரை, கோவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி. உத்தரவிட்டார். பொள்ளாச்சி - பல்லடம் ரோடு புளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (33). இவர் அதே பகுதியில் இரவு நேர ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில், சரவணகுமாரின் தம்பி மோகன்குமார், நண்பர் அருண்குமார் ஆகியோர் ஓட்டலில் இருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த, வடுகபாளையத்தை சேர்ந்த அமர்தீன் உள்பட 4 பேர் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அமர்தீன் திடீர் என,  அங்கிருந்த மோகன்குமாரிடம் என்னை தெரியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தெரியவில்லை என்று கூறியதும், அமர்தீனுக்கு கோபம் வந்தது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் அமர்தீனுடன் வந்தவர்களும், அவருக்கு ஆதரவாக பேசி தகராறு செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.

இதையறிந்த சரவணக்குமார், மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு எஸ்.ஐ. சிவக்குமார் மற்றும் போலீசார் தகராறு குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அமர்தீனுடன் ஓட்டலில் தகராறில் ஈடுபட்டவர்கள், பாலக்காடு ரோட்டில் உள்ள மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (25), ஆண்டிபட்டியை சேர்ந்த திவாகரன் (25), நத்தத்தை சேர்ந்த சிபிசக்ரவர்த்தி (28) என தெரிய வந்தது. மேலும் விசாரணையில், 3 போலீசாரும் குடிபோதையில், வடுகபாளையத்தை சேர்ந்த அமர்தீன் காரில் ஓட்டலுக்கு சாப்பிட சென்றதும், அவருக்கு ஆதரவாக தகராறு செய்ததும் தெரியவந்தது.  இந்நிலையில், ஓட்டலில்  தகராறு செய்த 3 போலீசாரையும், கோவை அயுதப்படைக்கு இடமாற்றம் செய்ய, மாவட்ட எஸ்பி. சுஜித்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள், அயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக மகாலிங்கபுரம் போலீசார் தெரிவித்தனர்.

Tags : policemen ,hotel ,Pollachi ,forces ,
× RELATED புதுச்சேரியில் கொரோனாவால்...