×

கோடை துவங்கும் முன்பாக கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

பொள்ளாச்சி,பிப்.13: கோடை காலம் துவங்கும் முன்பாக பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி கிராமங்களில்  சீரான குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று, ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நேற்று, ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, ஒன்றிய தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது அதிகபட்ச தீர்மானமாக, அலுவலக செலவினம் குறித்து  மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ஒன்றிய கவுன்சிலர்கள் பலரும், கிராமங்களில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வரும்மாறு, சண்முகசுந்தரம்(திமுக, துணைத்தலைவர்):பொள்ளாச்சி தெற்கு ஒன்றித்திற்குட்பட்ட பல கிராமபுறங்களில் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள்  ெபாதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக உள்ளது. அத்தகைய மின் கம்பங்களை அகற்றாததால், விபத்து நேரிட வாய்ப்புள்ளது. அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில், இடையூராக உள்ள மின்கம்பங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், கிராம பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் இல்லாமல் உள்ளது. அந்த குறையை போக்க நடவடிக்கை வேண்டும்.

கிராமப்புற ரோட்டோரம் வைக்கப்பட்டள்ள மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இலவச ஆடு மற்றும் கோழி வழங்க வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகள், முறையாக தேர்வு செய்யப்படாமல், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. யுவராஜ்(திமுக): கம்பாளபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் எஸ்.நல்லூர் கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் முறையாக குடிநீர் வழங்காமல் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் குடிநீர் வினியோகம் செய்தாலும், அதனை சுகாதாரமாக வினியோகம் செய்வது கிடையாது. மேலும், மேல்நிலை தொட்டியை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதால், குடிநீரை குடிப்போருக்கு நாள்போக்கில் கலாரா போன்ற நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கிராமப்புறங்களுக்கு சுகாதாரமான குடிநீரை சீராக வினியோகிக்க வேண்டும். பாலகணேஷ்(திமுக): ஜமீன்கோட்டாம்பட்டி கிராமத்தில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.  ஆனால், அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், கால்நடையை பராமரிக்க வசதியாக கால்நடை மருத்துவமனை இல்லாமல் உள்ளது. வஞ்சியாபுரம் மற்றும் கஞ்சம்பட்டி கிராமத்துக்கு சென்று வரும் தனியார் பஸ், முறையாக செல்வதில்லை என்ற புகார் தொடந்துள்ளது. கிராமங்களில் ஆங்காங்கு தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் உள்ளன.

ருக்மணி(திமுக) : ொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் உள்ள கோலார்பட்டியில் அரசு மருத்துவமனை, மின்வாரியத்துறை அலுவலகம், தபால்நிலையம் உள்ளிட்டவை செயல்படுகிறது. அனால், கோலார்பட்டி பஸ் நிறுத்தத்தில், தற்போது தனியார் பஸ் மட்டுமுன்றி, அரசு பஸ்களும் நிற்காமல் செல்கிறது.
ஒருசில பஸ்களே நிறுத்தப்படுவதால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.    மேலும், கிராம பகுதியிலிருந்து கோலார்பட்டிக்கு வரும் பஸ்களில் ஏறி, குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள்,  ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு, ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : water shortages ,villages ,
× RELATED ஊரடங்கு உத்தரவை மீறிய கிராமங்களுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி