தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கோவை, பிப்.13: கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை ஏப்ரல் மாதத்தில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பது இல்லை. இந்நிலையில், கோவை மாவட்ட தனியார் பள்ளிகளில் கடந்த மாதம் முதல் மாணவர் சேர்க்கை துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிகள் சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இனவாரியான மாணவர் சேர்க்கையில் குளறுபடி, 25 சதவீத இடஒதுக்கீட்டில் போலி மாணவர் சேர்க்கை, நன்கொடை வசூலித்த போன்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பள்ளிகளின் மீது பெற்றோர் நேரடியாக புகார் அளிக்க மறுக்கின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கை நடத்தி வரும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: