×

மாவட்டத்தில் மழைநீரை சேமிக்க ரூ.75 லட்சத்தில் 87 பண்ணை குட்டைகள்

கோவை, பிப்.13: கோவை மாவட்டத்தில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தாண்டு மாவட்டத்தில் ரூ.75 லட்சத்தில் 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் மூலம் கிராமங்களில் தனியார் வீடுகள் மற்றும் பொது இடங்களில் உறிஞ்சிக்குழி, தோப்புகளில் மண்வரப்பு அதிகரித்தல், விவசாயிகள் நிலத்தில் பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகள்  நடந்து வருகின்றன. மாவட்டத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் தோப்புகளில் கடந்த 2018-19ம் ஆண்டு 6 ஆயிரத்து 171 கிலோ மீட்டர் அளவு மண் வரப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை 320 கிலோ மீட்டர் அளவு மண் வரப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நொய்யல் ஆறு, அவற்றின் கிளை ஓடைகள், கவுசிகா நதி ஆகியவற்றில் கருங்கல் தடுப்பணைகள், சிமெண்ட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சும் கிணறுகள் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 226 எக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயிகள் தென்னை, சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக தென்னை சாகுபடிதான் அதிகளவில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் இருக்கும் விளை நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கப்படுவதால், கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய விளை நிலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கும் கீழ் விவசாய நிலம் வைத்து உள்ள சிறு, குறு விவசாயிகளின் விளை நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறு குறு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவசாய நிலத்தில் 15 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்கப்படுகிறது.

அதன்படி கடந்த 2018-19-ம் ஆண்டு ரூ.2 கோடியே 56 லட்சத்தில் 264 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டில் ரூ.75 லட்சத்தில் 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தற்போது வரை 17 பண்ணை குட்டைகள் அமைத்து முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் ஒரு மாதத்தில் மீதமுள்ள பண்ணை குட்டைகள் அமைத்து முடிக்கப்படும். பண்ணை குட்டைகள் மழையின் காரணமாக கடந்த ஆண்டு நிரம்பியது. இதனால் விவசாய நிலத்தில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. விவசாயிகள் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...