×

கோடைகாலம் துவங்கும் முன்னரே அரியலூர் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்த இளநீர்

அரியலூர், பிப். 13: கோடைகாலம் துவங்கும் முன்னரே அரியலூர் மாவட்டத்துக்கு பொள்ளாச்சியில் இருந்து இளநீர் விற்பனைக்கு வந்துள்ளது. கோடைகாலம் துவங்கும் முன்னரே இந்தாண்டு வெயில் கொளுத்த துவங்கியுள்ளது. இதனால் வரும் கோடைகாலத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்று பொதுமக்கள் கவலையில் உள்ளனர். உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி கடைகள் சாலையோரம் ஆங்காங்கே அதிகளவில் முளைத்துள்ளது. ஜூஸ், சர்பத் கடைகளும் சாலையோரம் மரத்தடியில் வைத்து விற்கப்படுகிறது. இதேபோல் இளநீர், மனிதர்களுக்கு தென்னை மரம் அளிக்கும் இயற்கையான ரசாயனமில்லாத பானமாகும். இளநீரை மனிதர்கள் பருகுவதால் ஏற்படும் பல்வேறு உடல்நல ரீதியிலான நன்மைகள் ஏற்படும். இளநீரை பருகுவதால் அரிப்பு நோய் எனப்படும் சொரியாசீஸ் கிருமிகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றுகிறது. இதனால் தோல்களை காப்பாற்றுகிறது. உடல் சோம்பலாகும்போது இளநீரை பருகுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுத்து சுறுசுறுப்பாகும். இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

தினம்தோறும் இளநீரை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவு வெகுவாக குறையும். மன அழுத்தம் குறைந்து இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் மலச்சிக்கல், செரிமான கோளாறு ஏற்படாமலும், நீரிழிவு நோயில் இருந்து கட்டுப்பட வைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அருமருந்தான இளநீர், தற்போது கோடை காலம் துவங்கவுள்ளதயைடுத்து பொள்ளாச்சியில் இருந்து அரியலூர் பகுதிக்கு விற்பனைக்காக வந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் பகுதியில் தென்னை சாகுபடி இருந்தாலும் அந்த தென்னை மரத்தின் இளநீரில் சுமார் 250 மிலி அளவு தண்ணீர் இருக்கும். ஆனால் பொள்ளாச்சி இளநீரில் 500 மிலி அளவு தண்ணீர் இருப்பதால், பொள்ளாச்சி இளநீரையே விரும்பி வாங்கி பருகுகின்றனர். அதனால் பொள்ளாச்சியில் இருந்து அதிகளவில் இளநீர் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வெயில் அதிகளவில் அடித்து வரும் நிலையில் கோடை காலத்தில் இன்னமும் அதிகமாக வெயில் அடித்தால் இளநீரின் விலை உயரவாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி இளநீர் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறுகையில், தென்னை சாகுபடிக்கேற்ற பருவநிலை பொள்ளாச்சி மற்றும் சுற்று பகுதிகளில் உள்ளதால் இளநீர் உற்பத்தியில் பொள்ளாச்சி சிறந்து விளங்குகிறது. இளநீரில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் வெளிமாவட்ட, மாநில வியாபாரிகள் பொள்ளாச்சி இளநீரை கொள்முதல் செய்து மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்கிறார்கள். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, ஆழியாற்று பகுதியில் பெரும்பாலான பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இளநீர் வெட்டி எடுத்து வந்த பிறகும் 6 நாட்கள் தரம் மாறாமல் இருப்பதால் இங்கு விளையும் இளநீருக்கு அதிக சிறப்பு உண்டு. மேலும் அரை லிட்டர் வரை தண்ணீர் இருக்கும். அதுவும் நல்ல ருசியாக இருப்பதால் பொள்ளாச்சி இளநீரை விரும்பி பருகி வருகிறார்கள். ஆண்டுதோறும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளிமாவட்ட, மாநிலங்களுக்கு தினமும் சுமார் 1 லட்சம் இளநீர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. லாரி மூலம் கொண்டு வந்து அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை , திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்கிறோம் என்றார்.

Tags : Ariyalur district ,
× RELATED கோடைகாலம் தொடங்கும் நிலையில்...