×

கீழகுரபாளையத்தில் மர்ம காய்ச்சல் தொடர்வதால் மருத்துவ குழு வீடு வீடாக ஆய்வு

குளித்தலை, பிப்.13: குளித்தலை அடுத்த கீழகுரபாளையத்தில் மர்ம காய்ச்சல் தொடர்வதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குளித்தலை ஒன்றியம் வதியம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழகுரபாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஹரிஹரன் (5). தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இவரது சகோதரி மது (10) நான்காம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சங்கர் (34). இந்நிலையில் மூவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு குளித்தலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  அங்கு ஹரிஹரன், சங்கர் ஆகியோருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மதுக்கு குறைந்த அளவே காய்ச்சல் உள்ளதால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கீழகுரபாளையம் பகுதியில் அடிக்கடி மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கை செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வௌியானது. . தினகரன் செய்தி எதிரொலியால் நேற்று காலை குளித்தலை ஒன்றியம் வதியம் ஊராட்சி கீழகுரபாளையம் மேலே கீழகுரபாளையம் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட பூச்சிகள் வல்லுநர் சிவக்குமார், ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் ரமேஷ், ஹேமா, சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் அருணாசலம், பழனிசாமி, சுப்பிரமணியம், மற்றும் சுகாதார குழுவினருடன் நடமாடும் மருத்துவ குழுவினர் இப்பகுதியில் முகாமிட்டு 142 வீடுகளில் ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரடியாக அணுகி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என கேட்டறிந்து, அதற்கேற்றார்போல் தடுப்பு நடவடிக்கையாக சிகிச்சை அளித்து சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், உடனே மருத்துவ முகாம் நடத்திய வட்டார சுகாதார மருத்துவ அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்