×

செய்யாறு விவசாயி கொலை வழக்கு கல்குவாரி லாரியை தடுத்து நிறுத்தியதால் ஏற்றி கொன்றேன் கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

செய்யாறு, பிப்.13: கல்குவாரி லாரியை தடுத்து நிறுத்தியதால் ஏற்றி கொன்றதாக செய்யாறு விவசாயி கொலை வழக்கில் கைதான லாரி டிரைவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணா மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(65), விவசாயி. இவர் கடந்த 9ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். மறுநாள் காலையில் கன்னியப்பன் பலத்த காயங்களுடன் சாலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து கன்னியப்பனின் மகன் முரளி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது நடந்த தகராறில் லாரி ஏற்றி கன்னியப்பன் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக கல்குவாரி உரிமையாளர், சூபர்வைசர் மற்றும் 2 லாரி டிரைவர்களிடம் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, சிறுங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகன்(39) என்பவர், கன்னியப்பனை லாரி ஏற்றி கொன்றது தெரியவந்தது. போலீசாரிடம் பாலமுருகன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது: கன்னியப்பன் விவசாய நிலத்தின் அருகே கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கன்னியப்பன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் லாரிகளை அடிக்கடி முற்றுகையிடுவார்கள். அதேபோல், கடந்த 9ம் தேதி நள்ளிரவு குவாரியில் இருந்து லாரியில் சென்றபோது கன்னியப்பன் லாரியை மறித்தார்.

லாரிக்கு வழிவிடும்படி பலமுறை கூறினேன். ஆனால் அவர் வழிவிடாமல் லாரிக்கு முன்னால் படுத்துக் கொண்டார். லாரியை இயக்கினால் வழிவிட்டுவிடுவார் என நினைத்து லாரியை ஓட்டி சென்றேன். இரவு நேரம் என்பதால், கன்னியப்பன் எழுந்து சென்றாரா, இல்லையா என தெரியாமல் லாரியை அவர் மீது ஏற்றிவிட்டேன். இதில் கன்னியப்பன் அதே இடத்தில் பலியானார்.  இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பாலமுருகனை கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Kalukwari ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே...