×

சேத்துப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்செல்போன் கடைக்காரர் வீட்டில் 50 சவரன், ₹2 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

சேத்துப்பட்டு, பிப்.13: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் செல்போன் கடைக்காரர் வீட்டில் பட்டப்பகலில் 50 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார்(29). செல்போன் கடை வைத்துள்ளார். இவரது சித்தப்பா மகன் திருமணம் திருத்தணியில் நேற்று நடந்தது. இதனால் தினேஷ்குமார் குடும்பத்தினர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு திருத்தணிக்கு சென்றிருந்தனர்.

பின்னர், திருமணம் முடிந்ததும் நேற்று மாலை ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சாவி துவாரம் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது தெரிந்தது. இதையடுத்து பின்புறம் வழியாக உள்ளே சென்றனர். அப்போது, வீட்டின் 2 அறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், அதில் வைத்திருந்த 50 சவரன் நகை, ₹2 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED தண்டராம்பட்டு அருகே துணிகரம் பெண்...