×

வேலூரில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை மறுதினம் தொடக்கம்

வேலூர், பிப்.13: வேலூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாளை (14ம் தேதி) தொடங்கி 17ம் தேதி வரை நடக்கிறது. வேலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆழிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-2020ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வேலூரில் 14, 15 மற்றும் 17ம் தேதிகளில் நடக்கிறது. ஆண்கள், பெண்களுக்கு தடகளம், நீச்சல், வாலிபால், குத்துச்சண்டை, ஜூடோ, இறகுபந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கபடி மற்றும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார்.


போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் 25 வயதுக்கு உட்பட்டு, 1995ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை சமர்பித்து தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். குழு போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் தங்களது அணியின் பெயர்கள், வீரர் விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலரின் dsovel@gmail.com என்ற மின்னஞ்சலில் தகவல் அனுப்ப வேண்டும். போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு ₹1000, ₹750, ₹500 பரிசு அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதேபோல் குழு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு ₹1 லட்சம், ₹75 ஆயிரம், ₹50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இதில், தேர்வு செய்யப்படும் வீரர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Chief Minister ,games ,Cup ,Vellore ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...