வேலூர்- ஆற்காடு சாலையில் தீராத தலைவலி ஆக்கிரமிப்புகளால் 60 அடி சாலை 30 அடியாக சுருங்கியது தினமும் நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்

வேலூர், பிப்.13: வேலூர்- ஆற்காடு சாலை ஆக்கிரமிப்புகளால் 60 அடி சாலை 30 அடியாக சுருங்கியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் நெரிசலில் சிக்கி திணறி வருகின்றனர். இப்பிரச்னை தீராத தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னைக்கு அடுத்த படியாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் வேலூர் மாநகர் முதலிடத்தில் உள்ளது. இதனால் சென்னையில் உள்ள நகைகடைகள், கார் ஷோரூம்கள், ரெடிமேட் ஷோரூம்கள் உட்பட அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் தங்களது கிளைகளை வேலூரில் தொடங்கியுள்ளது. அதேபோல் கல்வி, தொழில், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேலூர் வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. அதேபோல் ஆட்டோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Advertising
Advertising

இதில் குறிப்பாக வேலூர்- ஆற்காடு சாலை நெரிசலுக்கு பெயர்போன சாலையாகவே மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர்- ஆற்காடு சாலை இருவழிச்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வேலூரில் இருந்து செல்லும் பஸ்கள் மட்டுமே அவ்வழியாக இயக்கப்படுகிறது. (கார், ஆட்டோ, பைக்குகள் வழக்கம்போல் இருவழிச்சாலையாக பயன்படுத்தி வருகிறது) ஆற்காடு, வாலாஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் பழைய பஸ்நிலையம் வரும் பஸ்கள் சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலை வழியாக செல்கிறது. இப்படி இருந்தும். இந்த சாலையில் தினமும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் சாலையின் இருபுறங்களிலும் கடைக்காரர்கள் 5 அடி வரையில் ஆக்கிரிமித்து கடைகளை கட்டியுள்ளனர். அதோடு மற்றொரு 5 அடியில் கடைகளுக்கான போர்டு, விற்பனை பொருட்கள் என்று வைத்து 60 அடியாக இருந்த சாலையை ஆக்கிரமித்து 30 அடியாக சுருக்கியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சிஎம்சி மருத்துவமனை எதிரே உள்ள கடைகளில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் அதனை முழுமையாக அகற்றவில்லை. இதனால் மீண்டும் வேலூர்-ஆற்காடுசாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டது. அதோடு சிஎம்சி மருத்துவமனை தொடங்கி, காகிதப்பட்டறை உழவர் சந்தை வரையில் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளும் முளைத்துவிட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை ஆகிய 3 துறையினரும் கண்டும் காணாமல் செல்கின்றனர்.

இதனால் வேலூர்- ஆற்காடு சாலை தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதால், ஆற்காடு சாலையை கடப்பதற்கு, சுமார் 20 நிமிடங்கள் வரை ஆகிடுவதால் வாகன ஓட்டிகளுக்கு வேலூர்- ஆற்காடு சாலையில் செல்வது பெரும் தலைவலியாக உள்ளது. எனவே மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை ஆகிய 3 துறை அதிகாரிகள் இனியாவது வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: