வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

வேலூர், பிப்.13: வேலூரில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் 12 பள்ளிகளில் இருந்து 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று காலை 10 மணியளவில் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் தொடங்கியது. போட்டிகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பொறுப்பு நோயலின் ஜான் வரவேற்றார். கவுரவ விருந்தினர்களாக சர்வதேச தடகள வீரர் குடியாத்தம் எம்.வெங்கடாசலம், குத்துச்சண்டை வீரர் ஆர்.ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகளில் மாவட்டத்தின் 12 மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளை சேர்ந்த 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தடகளம், இறகு பந்து, கபாடி, எறிபந்து, குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஓட்டம், மூன்று சக்கர பைக் ரேஸ் என பல்வேறு போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு விளையாட்டிலும் முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: