அணைக்கட்டு ஒன்றியம் கவுதமபுரத்தில் தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போலீசில் புகார்

அணைக்கட்டு, பிப். 13: அணைக்கட்டு ஒன்றியம் கவுதமபுரத்தில் தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போலீசில் புகார் அளித்தனர். அணைக்கட்டு தாலுகா ஊணை வாணியம்பாடி அடுத்த கவுதமபுரத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள தெரு வளைவில் வீடு கட்டியிருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சாலையை ஆக்கிரமித்து வீடுகட்டி வருகிறாராம். மேலும், ஏற்கனவே கட்டியுள்ள வீட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுநீரை தெருவில் விடுவதால் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி அப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், அப்பகுதியில் வாகனங்களில் சென்று வருபவர்கள் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அவ்வழியாக சென்றுவர சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் முறையிட்டால், நான் ஓய்வு பெற்ற எஸ்ஐ அப்படிதான் செய்வேன். உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என கூறினாராம். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கடந்த 5ம் தேதி எஸ்பி மற்றும் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். மனுவை பெற்ற போலீசார் வருவாய் துறையினரிடம் புகார் அளியுங்கள் என கூறி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: