முத்தையாபுரம் பகுதி ஓட்டல், கடைகளில் திருடிய வாலிபர் கைது

ஸ்பிக்நகர், பிப்.13: முத்தையாபுரம் பகுதியில் ஓட்டல் உள்பட 6 கடைகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(52). இவர் தவசிபெருமாள் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். இரவு கடையை அடைத்துவிட்டு நாகர்கோவிலில் நடந்த திருமண வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடையில் வேலை பார்க்கும் சங்கர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.1200 திருட்டு போனது தெரியவந்தது. இதேபோல் முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்தவர் பெருமாள். சம்பவத்தன்று இரவு நெல்லைக்கு சென்றுவிட்டதால் அவருடைய மனைவி பரமேஸ்வரி கடையை பூட்டிவிட்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது கடையின் உள்பக்க கதவு திறந்து கிடப்பதையும், கடையில் வைத்திருந்த ரூ.1500 திருடு போயிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertising
Advertising

இரு சம்பவங்கள் குறித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் சிறப்பு எஸ்ஐ சேகர் வழக்குப்பதிவு செய்தார். எஸ்ஐக்கள் சேட்டைநாதன், ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு பைக்கில் சென்றவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முத்தையாபுரம் தங்கமணிநகரைச் சேர்ந்த குமார் மகன் சதீஷ் என்பதும், முத்தையாபுரம் பகுதிகளில் உள்ள ஓட்டல், 6 கடைகளில் பணம், சிகரெட் பண்டல், உள்ளிட்டவைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: