மெஞ்ஞானபுரத்தில் துறைமுகப்பணிக்கு கல் ஏற்றி சென்ற லாரி, பைக் மீது மோதி விபத்து பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

உடன்குடி, பிப்.13: குலசேகரன்பட்டினம் துறைமுகப்பணிக்கு பாறாங்கற்கள் ஏற்றி சென்ற லாரி, பைக் மீது மோதியதையடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் அனல்மின்நிலையம், துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது அனல்மின்நிலையம் பகுதியில் மழை வெள்ளநீர் தேங்கி கிடப்பதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துறைமுகம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. துறைமுக கட்டுமான பணிகளுக்காக பாறாங்கற்கள், பேய்க்குளம், கருங்குளம் பகுதிகளில் உள்ள குவாரியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மெஞ்ஞானபுரம், உடன்குடி பஜார் என பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் செல்லும் வழியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பாறாங்கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் பாடி மட்டத்தைவிட அதிக உயரத்தில் கற்களை எவ்வித பாதுகாப்புமின்றி ஏற்றி வருவதால் வழியில் பல இடங்களில் கற்கள் சாலையில் விழுகிறது. இதனால் சாலையில் செல்லுவோர் மிகவும் அச்சத்துடனேயே செல்கின்றனர்.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகார் அளித்தும் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. பாறாங்கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளை பார்த்தாலே சாலையில் செல்வோர் உயிரை பிடித்துக் கொண்டு ஓட்டம்பிடிக்கும் நிலையுள்ளது. இந்நிலையில் நேற்று மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் ஆல்வின் தனது குழந்தையை பள்ளியில் கொண்டு விடுவதற்காக வந்தார். சாலையோரத்தில் நின்று தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதிக பாரத்துடன், அதிவேகத்துடன் வந்த லாரி லேசாக உரசியுள்ளது. இதனால் அலறித்துடித்த அவர் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு லாரியை சிறைபிடித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகபாரம் ஏற்றி வந்த லாரியை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: