தூத்துக்குடி சின்னமணி நகரில் திறக்கப்படாத துணை சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடி சின்னமணி நகரில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகர் பூங்கா அருகில் பொதுமக்கள் நலனுக்காக நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கன்டெய்னர் பெட்டியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார நிலையத்தை அமைத்து அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனை உடனடியாக திறந்து அதற்குரிய மருத்துவ ஊழியர்களை நியமித்து சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

அதே நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாரிடமிருந்த குப்பை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக நடத்த முன்வந்தது. தனியார் வசம் இருந்தபோது சாதாரண தள்ளுவண்டி மூலம் ஊழியர்கள் தெரு, தெருவாக சென்று குப்பைகளை எடுத்து வந்தனர். தற்போது மாநகராட்சி அவர்களுக்கு மினி லாரியை வழங்கியுள்ளது. லாரிக்கு டீசல் அதிகம் செலவாகும் என்பதால் குறிப்பிட்ட இடத்தில் அதனை நிறுத்திவிட்டு ஊழியர்கள் தெருக்களுக்குள் சென்று குப்பைகளை சாக்கு பைகளில் எடுத்து செல்கின்றனர். டீசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நாட்கள் அந்த லாரி வருவதில்லை. இதனால் தெருக்களில் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் கால்நடைகள் அவற்றை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை அகற்றும் பணியை தனியாரிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக செயல்படுத்தியபோது முன்பைவிட வேகமாக பணிகள் நடக்கும் என்று எதிர்பார்த்தநிலையில் தற்போது மந்த கதியில் குப்பைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: