×

நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி இடையே கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலை குழிகளில் குவாரி கழிவுகளை போட்ட அவலம்

நாங்குநேரி, பிப். 13:  நாங்குநேரி - மூலைக்கரைப்பட்டி சாலையில் பயணித்த கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலையை மறைக்க குவாரி கழிவுகளைப் போட்டு மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரியிலிருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அதனை அப்பகுதியினர் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வழியாக 30 டன் எடை கொண்ட கனரக வாகனங்கள் கல் பாரம் ஏற்றிக் கொண்டு சாத்தான்குளத்திற்குச் செல்கின்றன. இதனால் அதே சாலையில் அம்பலம், உன்னங்குளம், அரியகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து மெகா பள்ளங்கள் உருவாகின. இதனால் சிறு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த பள்ளங்களில் மர்ம நபர்கள் குவாரியிலுள்ள கல் கழிவுகளைக் கொட்டி வைத்துள்ளனர். இதனால் சாலையில் பெரிய தடுப்புச் சுவர் வைத்தது போல காணப்படுகிறது. மேலும் வாகனங்கள் சாலையோரம் உள்ள வயல் வெளிகளில் இறங்கிச் செல்கின்றன. 6 டன் எடை கொண்ட வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு அமைக்கப்பட்ட கிராமப்புறச் சாலையில், அதை விட அதிக பாராம் ஏற்றிக் கொண்டு வரும் கனரக வாகனங்களால் சாலை சேதமடைந்திருப்பது அப்பகுதினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே விதிகளை மீறி சாலைகளைச் சேதப்படுத்தும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலிய்றுத்தியுள்ளனர்.

Tags : Nankuneri-Mulakkaraipattu ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி