×

உக்கிரன்கோட்டை- அழகியபாண்டியபுரம் சாலையில் சர்வீஸ் ரோடு வசதியின்றி பாலம் கட்டுமானம்

மானூர், பிப். 13:  மானூர் அருகே  உக்கிரன்கோட்டை- அழகியபாண்டியபுரம்  நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானம் நடந்துவரும் நிலையில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாததால் கிராம மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். மானூர் தாலுகா உக்கிரன்கோட்டை- அழகியபாண்டியபுரம்  நெடுஞ்சாலை பிரதான சாலையாகத் திகழ்கிறது. குறிப்பாக வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டி வழியாக நெட்டூர், ஆலங்குளம், சரண்டை பகுதிகளுக்கு செல்லும் அத்தியாவசிய சாலையாக உள்ளது. வேளாண் மற்றும் வர்த்தகரீதியாக திகழும் இச்சாலையை ஆலங்குளம் மற்றும் சுரண்டை முதல் நெல்லை வரை தினமும் 1000க்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இது குறுகலாகவும், பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையிலும் இருந்ததால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து தினகரனிலும் பல முறை செய்தி படத்துடன் வெளியானது.

 இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் அழகியபாண்டியபுரம் முதல் நெட்டூர் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோதும் உக்கிரன்கோட்டை வரை 5க்கும் மேற்பட்ட பாலங்கள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதுகுறித்த கோரிக்கைகளை அடுத்து பழைய சேதமடைந்த பாலங்களை உடைத்து புதிதாக பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இருப்பினும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.  குறிப்பாக உக்கிரன்கோட்டை இந்தியன் வங்கி எதிரே பாலத்தில் இணைப்பு சாலை அமைக்கப்படவில்ைல. இதனிடையே மற்ற பாலங்களையொட்டி அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலைகள் முறையாக அமைக்கப்படாததால் வாகனஓட்டிகள் வந்துசெல்வதில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

 உக்கிரன்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், வழியாக அம்பை, தென்காசி செல்லும் பஸ்கள், பல்வேறு கல்வி வாகனங்கள், கனரக வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்தும் நிலையில் இருசக்கர வாகனங்கள், ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பல்வேறு ஆட்டோக்களும், ஆம்புலன்ஸ்களும் தொடர்ந்து இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன. பாலங்கள் வேலை நடைபெறும் பகுதியில் இணைப்பு சாலை இல்லாததால் அவதிப்படும் மக்கள், ஏற்கனவே போடப்பட்ட இணைப்பு சாலை தரமில்லாதது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர்களுக்கும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே இதை காரணம் காட்டி உக்கிரன்கோட்டை வழியாகச் செல்லும் பஸ்கள் மாற்று வழியில் செல்வதால்  பணிகளுக்கு செல்வோரில் பலர்  காலை, மாலை மற்றும் இரவு நேரத்திலும் 1 கி.மீ. தொலைவு  நடந்தும் செல்லும் அவலம் தொடர்கிறது. மேலும் இரவு நேரத்தில் தனியாக நடக்க பெண்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : bridge ,service road ,road ,
× RELATED புதிய பாலம் பயன்பாட்டுக்கு வர...