×

முத்துப்பேட்டை அருகே ஆமை வேகத்தில் நடக்கும் இணைப்பு சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

முத்துப்பேட்டை, பிப்.13: முத்துப்பேட்டை அருகே ஆமை வேகத்தில் நடக்கும் இணைப்புசாலையால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வேதாரண்யம் சாலையிலிருந்து பிரிந்து மேலப்பெருமழை வரை செல்லும் சாலையானது சுமார் 4கிமீ சாலையாகும். இந்த சாலை கீழப்பெருமழை, மேலப்பெருமழை கிராம மக்கள் மட்டுமின்றி தொண்டியக்காடு துவங்கி இடும்பாவனம், குன்னலூர் வரை உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒருபுறம் முத்துப்பேட்டை - திருத்துறைப் பூண்டி, மறுபுறம் முத்துப்பேட்டை - பட்டுக்கோட்டை - வேதாரண்யம் செல்ல குறுக்கு பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி வாகனங்களும் சென்று வருகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சீரமைத்து சுமார் 15ஆண்டுகள் ஆனதால் இதனை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3மாதங்களுக்கு முன்பு சுமார் 1.50கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலை சீரமைப்பு பணிகள் துவங்கியது. முதல் கட்டமாக இடும்பாவனம் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி கீழப்பெருமழை கருதங்குளம் வரை சுமார் 2கிலோமீட்டர் சாலை சதவிதம் முடிந்தநிலையில் இங்கிருந்து மேலப்பெருமழை வரை உள்ள மீதம் 2கிலோமீட்டர் சாலையில் ஏனோ காரணங்களால் வெறும் ஜல்லிகளை மட்டுமே பரப்பி அப்படியே கிடக்கிறது. சுமார் 15தினங்கள் மேலாகியும் அடுத்தக்கட்ட பணிகள் துவங்காததால் மக்கள் நடந்து செல்ல கூட முடியவில்லை. இந்த சாலையில் வந்த பேரூந்துகள் பள்ளி வாகனங்கள் தற்பொழுது வருவதில்லை. இப்பகுதி மக்களும் அதிகபட்சமாக 6கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு மக்கள் செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரி மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.

அதேபோல் முதியவர்கள் பெண்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது இப்பகுதியில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதால் கதிர் அடிக்கும் மிசின் நெல் ஏற்ற டிராக்டர் போன்ற வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. இதனால் விவசாயிகள் வெறுப்படைந்துள்ளனர். இதுகுறித்து இந்த ஆமைவேகத்தில் நடக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்த பலனுமில்லை. இதனால் நாளுக்குநாள் மக்கள் அவதிதான் அதிகரித்துள்ளது. ஆகவே இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் கிடைப்பில் போடப்பட்ட இந்த சாலைபணியை உடன் துவங்கி முடிக்க வேண்டும் அப்படி தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமகள் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து சிவகுருநாதன் கூறுகையில்,

மக்கள் இடும்பாவனம் மருத்துவமனைக்கு செல்வதற்கும், பட்டுக்கோட்டை பேருந்துக்கு செல்வதற்கும் சுமார் 6 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அறுவடை நேரம் என்பதால் விவசாயிகளும் சிரமப்படுகின்றனர். இப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரரிடம் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து வட்டார காங்கிரஸ் தலைவர் குன்னலூர் வடுகநாதன் கூறுகையில், சுமார் 3மாதங்களாக இந்த சாலை ஆமை வேகத்தில் போட்டு வருகின்றனர். இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் உடன் சாலை பணியை துவங்கி முடிக்காவிட்டால் இப்பகுதி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags : road ,
× RELATED தாம்பரம்- சின்னமலை இடையே மந்தகதியில்...