×

மின்கம்பியில் பனைமட்டை உரசியதால் தீ 2 ஏக்கர் சம்பா பயிர் எரிந்தது

திருவாரூர், பிப்.13: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே விவசாயி ஒருவரின் 2 ஏக்கர் சம்பா பயிர் தீ பற்றி எரிந்தது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ள்ப்பட்ட நிலையில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி குடவாசல் தாலுக்கா மேலப்பனையூர் கிராமத்தில் 2 ஏக்கர் வயலில் சம்பா சாகுபடியை மேற்கொண்டிருந்த விவசாயி நீலமேகம் என்பவர் வயலிலும் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அறுவடை நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு காரணமாக அறுவடை நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை நீல மேகத்தின் வயல் அருகே இருந்துவரும் பனைமரம் ஒன்றின் ஒலையானது அதன் மேற்பகுதியில் சென்றுகொண்டிருந்த மின்கம்பியில் உரசியதில் அந்த பனை மட்டையில் ஏற்பட்ட தீ அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர் மீது விழுந்தது. இதனையடத்து நீல மேகத்தின் அறுவடை வயல் பற்றி எரிவதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக குடவாசல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு நிலையத்திலிருந்து அலுவலர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பெரும்பாலான பகுதியில் நெற்பயிர் எரிந்து சாம்பலானது. இருப்பினும் அருகில் இருந்து வரும் பயிர்களுக்கு இந்த தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்படி விவசாயி நீலமேகத்திற்கு ரூ 50 ஆயிரம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

Tags : Samba ,
× RELATED தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம்