×

விவசாயி வேதனை விவசாயிகள் நலன் கருதி மத்திய கூட்டுறவு வங்கி துவங்க வேண்டும்

திருவாரூர், பிப். 13: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி மாவட்டத்திற்கு என தனியாக மத்திய கூட்டுறவு வங்கி துவங்கிட வேண்டும் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஊராட்சியின் முதல் கூட்டமானது நேற்று தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், துணைத் தலைவர் கலியபெருமாள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர். மாவட்ட ஊராட்சி செயலர் கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார் மற்றும் அலுவலர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தஞ்சை -நாகை தேசிய நெடுஞ்சாலை பணியானது கடந்த 10 ஆண்டுகளாக திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது, கும்பகோணம் -மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை சாலை மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் -திருத்துறைப்பூண்டி சாலை ஆகியவற்றினை ஈசிஆர் சாலைக்கு ஏற்ப மேம்படுத்தவும் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் கேட்டுக்கொள்வது, திருவாரூர் -காரைக்குடி ரயில் பாதையில் கேட் கீப்பர்களை நியமனம் செய்து விரைவு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் ,திருத்துறைப்பூண்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் எனவே அங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுவட்ட சாலை உடனடியாக அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளின் குடும்பங்கள் பயனடையும் வகையில் வேளாண் கல்லூரி ஒன்றினை துவங்கிட வேண்டும்,

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக இருந்துவரும் மூளை நரம்பியல் உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்கள் பதவி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், திருவாரூர் மாவட்டத்திற்கு என தனியாக மாவட்ட பதிவாளர் அலுவலகம் துவங்கிட கேட்டுக்கொள்வது, மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இலக்கில்லாமல் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய அரசை கேட்டுக்கொள்வது, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிடவும் கேட்டுக்கொள்வது,

மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் தனியாக பிரிக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மட்டுமே செயல்பட்டு வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்வதற்கும் அதற்கு உரிய இழப்பீடு பெறுவதற்கும் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் திருவாரூர் மாவட்டத்திற்கு என தனியாக மத்திய கூட்டுறவு வங்கி ஒன்றினை துவங்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Central Co-operative Bank ,
× RELATED மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்