மேலும் 10 பேருக்கு வலை கும்பகோணம் திருவள்ளுவர் நகரில் பராமரிப்பின்றி கிடக்கும் நகராட்சி பூங்கா

கும்பகோணம், பிப்.13: கும்பகோணம் திருவள்ளுவர் நகரில் உள்ள நகராட்சி பூங்கா மற்றும் தாமரை குளம் பராமரிப்பின்றி கிடப்பதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கும்பகோணம் நகராட்சிக்குட்ப்பட்ட திருவள்ளுவர் நகர் இரண்டாவது கிராஸில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் நடைபாதை, மின்விளக்குகள், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள், முதியர்கள் அமர்ந்துகொள்ளும் வசதிகள் உள்ளிட்டவைகள் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றத்தாலும், நிர்வாக அதிகாரிகள் மாற்றதாலும், பூங்காவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இப்பூங்காவை பராமரித்து பல ஆண்டுகள் ஆனதால், தற்போது பூங்காவை சுற்றிலும் செடி கொடிகள் மண்டி நடக்க முடியாமலும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், சில உபகரணங்கள் திருட்டு போனதால், சிறுவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிக்காக, சிமெண்ட் தொட்டிகளை கட்டி, அதில் குப்பைகள், அழுகிய உணவுப்பொருட்கள், வீணாகிப்போன பழங்கள், உணவு விடுதிகளில் உள்ள இலைகளை போட்டு வந்தனர். சில நாட்கள்வரை பராமரித்து பின்னர் அப்படியே விட்டு விட்டதால், தற்போது அதில் புழுக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி, திருவள்ளுவர் நகரில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றத்தால், அப்பகுதியினர் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார்களையும், கோரிக்கை மனுக்களை வழங்கியும், அதிகாரிகள் கண்டு கொள்வதாக இல்லை.இந்நிலையில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள குப்பைகளில் புழுக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி அதிகமானதால், அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி மற்றும் பேரன்களுக்கு, கடந்த மாதம் வாந்தி பேதி ஏற்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் சில நாட்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதேபோல் அந்நகரில் ஏராளமானோருக்கு காய்ச்சல் மற்றும் சரும நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சுப்பிரமணியன் என்பவர், நகராட்சி அதிகாரிகளிடம், தனது குடும்பத்தின் நிலையையும், அங்குள்ள சுகாதார சீர்கேடுகள் குறித்தும் புகாரளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், திருவள்ளுவர் நகரிலுள்ள அனைவரும் காய்ச்சல் போன்ற பயங்கர நோயினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கும்பகோணம் திருவள்ளுவர் நகரிலுள்ள பூங்காவை சுத்தம் செய்து, குப்பைகளை தரம்பிரிக்கும் பணியினை, இடம்மாற்றம் செய்யாவிட்டால், அக்கழிவுகளை கொண்டு வந்து, நகராட்சி அலுவலகம் முன்பு கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: