×

சுனாமியால் சேதமடைந்த நிலத்தில் 15 ஆண்டுக்கு பின் நெல் அறுவடை பணி தீவிரம்

காரைக்கால், பிப்.13: காரைக்காலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, சுனாமியால் சேதமடைந்த நிலத்தில் விவசாயம் செய்து நேற்று அறுவடை நடைபெற்றது. சுனாமிக்கு பிறகு கடல் நீர் உட்புகுந்து உவர் நிலமாக மாறிய விளைநிலம் பண்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயம் நடைபெற்றிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தெற்காசிய நாடுகளை புரட்டிப்போட்ட சுனாமி பேரழிவை எளிதில் யாரும் மறந்து விட முடியாது. சுனாமி தாக்குதலின் போது உருவான பேரலையின் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் சுமார் 520 பேர் உயிரிழந்தனர். ஏராளமான மீனவர்களின் வீடுகள், சொத்துக்கள் இருந்த இடம் தெரியாமல் போனது. அதேபோல், காரைக்கால் எல்லையான பூவம் பகுதியில், விவசாய விளைநிலங்களில் கடல் நீர் புகுந்தது. இதன் காரணமாக விளைநிலங்கள் அழிந்ததோடு நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி அந்தப் பகுதி முழுவதுமே விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவானது.

இதன் காரணமாக பலர் வேறு வழியின்றி தங்கள் விளைநிலத்தை வந்த விலைக்கு விற்று சென்றனர். பலர் அந்தப்பகுதியில் விவசாயத்தை மறந்து போனார்கள். அனைத்திற்கும் மேலாக, பூவம் - பிடாரி அம்மன் கோயில் பகுதியில் இருந்த சுமார் 200 ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக விடப்பட்டன. அங்குள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முன்வரவில்லை.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயி செந்தில்முருகன் என்பவர், விவசாயத்தை மறக்க முடியாமல், வரிச்சிக்குடி பாசனதாரர் சங்க தலைவரும், பேராசிரியருமான சுப்புராயனுடன் இணைந்து, பல்வேறு விவசாய மற்றும் மண் வல்லுநர்களுடன் கலந்துரையாடி, உப்பு நீர் புகுந்த மன்ணை மாறும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அதன் பயனாக, பூவம் பிடாரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில், தற்போது விவசாயம் நடைபெற்று அறுவடை நடந்தது. மாவட்ட வேளாண் துறை கூடுதல் இயக்குனர் செந்தில்குமார், நெல்லை அறுவடை செய்து அறுவடை பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா, துணை பொறியாளர் வீரமணி, பணி ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அரசு அதிவலர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்காலில் விவசாயி சாதனை 200ஏக்கர் விளைநிலம் விவசாயத்திற்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டது
பேராசிரியர் சுப்புராயன், செந்தில்முருகன் கூறியது: உப்பு நீர் புகுந்த நிலத்தில் முதலில் வட்டார வளர்ச்சி துறையின் உதவியோடு மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், கடல் நீர் உட்புகாத வகையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பூவம் வாய்க்கால் பொதுப்பணித் துறையினரால் தூர்வாரப்பட்டு நிலத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதோடு தடுப்புச்சுவர் காரணமாக மழைநீர் வீணாக கடலில் கலக்காத வண்ணம் நிலங்களிலேயே சேமிக்கப்பட்டது. இதன் காரணமாக நிலத்தடி நீரும் நன்னீராக மாறியது. தற்போது அந்த பகுதியில் உள்ள 200 ஏக்கர் விளைநிலங்கள் விவசாயத்திற்கு ஏற்ற முறையில் மாற்றப்பட்டுள்ளது.

Tags : land ,
× RELATED கொரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரம்