×

கீழ்வேளூரில் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி தீவிரம்

கீழ்வேளூர், பிப்.13: கீழ்வேளூரில் ரயில் பாதை மின்மயாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி மார்ச் மாதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே துறை மின்சார ரயில் இயக்கினால் எரிபொருள் செலவு 75 சதவீதத்திற்கு மேல் மிச்சம் ஆகும். எனவே ரயில் பாதைகள் அனைத்தையும் மின் பாதையாக மாற்றி வருகிறது. மின்சார ரயிலுக்கு தேவையான மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பெறப்பட்டு வருகிறது. மின்சார ரயில் இயக்கினால் காற்று மாசு ஏற்படாது. ரயில் இழுவை திறன் அதிகமாக இருக்கும். டீசல் இஞ்சின் ரயிலை ரயில் நிலையங்களில் நின்று சென்றாலே அல்லது ரயில் இஞ்சினை நிறுத்தி விட்டு மீண்டும் ஸ்டாட் செய்தாலே அதிக டீசல் செலவு ஏற்படும். ஆனால் மின்சார ரயில் செலவு ஏற்படாது. இப்படி பல விதத்தில் மின்சார ரயிலில் எரிபொருள் செலவு மிக மிக குறைவு என்பதால் ரயில்வே துறை மின்பாதை அக்கும் பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

தற்போது தஞ்சை-திருவாரூர், நாகை-காரைக்கால் இடையே ரயில் பாதை 95 கி.மீ. தூரம் மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சை முதல் திருவாரூர் வரையிலான மின் பாதை பணி முடிக்கப்பட்டு மின்சார ரயில் சோதனை ஓட்டம் கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்றது. தற்போது திருவாரூரில் இருந்து நாகை வழியாக காரைக்கால் வரை 42 கி.மீ. தூரம் மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூரில் இருந்து கீழ்வேளூரை வரை மின் கம்பம் நடப்பட்டு மின் கம்பி அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. கீழ்வேளூர் முதல் நாகை வரை மின் கம்பம் அமைக்கும் பணியும், மின் கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்து நாகையில் இருந்து காரைக்கால் வரை ரயில் மின் பாதை அமைக்க மின் கம்பம் நடும்பணி நடைபெற்று வருகிறது.

மின் பாதைக்கு தேவையான உயர் மின் அழுத்தம் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பாண்டிச்சேரி மின்குழும திடத்தில் இருந்து பெறப்படுகிறது. அதன்படி தஞ்சை, திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. திருவாரூர்-காரைக்கால் இடையே வரும் மார்ச் மாதம் இறுதியில் பணி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் இருந்து காரைக்கால் ரயில் பாதை முடிக்கப்பட்டால் அடுத்து நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் பாதை அமைக்கும் பணி மத்திய அரசு அனுமதி கொடுத்த உடன் தொடங்க உள்ளனர்.

காரைக்காலில் இருந்து நாகை-திருவாரூர், தஞ்சை வழியாகவும், காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை வாழியாகவும் பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகிறது. குறிப்பாக காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து அதிக அளவில் சரக்கு ரயில்கள் நிலக்கரி, இரும்பு தூள் ஆகியவை இயக்கப்பட்டு வருவதால் ரயில்வே துறைக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. தற்போது மின் பாதை அமைக்கப்பட்டால் ரயில்வே துறைக்கு பெரிய அளவில் எரிபொருள் மிச்சம் ஏற்பட்டு ரயில்வே துறைக்கு கூடுதலாக லாபம் கிடைக்கும்.

Tags : Keezhveloor ,
× RELATED கீழ்வேளூர் அருகே கடுவையாற்றின்...