×

வெட்டாறு பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை உடனே மாற்ற வேண்டும்

நாகை,பிப்.13: நாகை வெட்டாறு பாலத்தில் சேதம் அடைந்துள்ள அனைத்து மின் கம்பங்களையும் உடனே சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்தின் எல்லையாக நாகூர் வெட்டாறு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் போடப்பட்டுள்ள அனைத்து மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் ஒரு சில மின் கம்பங்களில் இருந்து மட்டுமே வெளிச்சம் கிடைக்கிறது. மாவட்டத்தின் எல்லை பகுதியாக இருப்பதால் போதிய மின் வெளிச்சம் இன்றி இந்த பாலம் இருளில் மூழ்கியிருப்பது சமூக விரோதிகளுக்கு புகலிடமாக அமைந்துள்ளது. மேலும் அருகிலேயே பாண்டிச்சேரி மாநில எல்லை வருவதால் குடிமகன்களின் கூடாரமாகவும் இந்த பாலம் அமைந்துள்ளது.

மாலை நேரம் தொடங்கியவுடனே மதுபானங்களை அருந்துவதற்காக நிறைய பேர் இந்த பாலத்தை நோக்கி வர தொடங்கி விடுகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் சேதம் அடைந்த மின் கம்பங்களால் அந்த வழியாக செல்வோர்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நாகூர் வெட்டாறு பாலத்தில் சேதம் அடைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று சிவசேனா கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பழுதடைந்து நிற்கும் மின் கம்பங்கள் பழுதடைந்தே நிற்கிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பழுதடைந்த மின் கம்பங்களை எல்லாம் சீர் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED நாகர்கோவிலில் மின் கம்பங்கள் மீது மோதி கடைக்குள் புகுந்த சரக்கு லாரி