×

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட உதவி பெறும் துவக்க பள்ளியை உடனே மேம்படுத்த வேண்டும்

கொள்ளிடம்,பிப்.13: கொள்ளிடம் அருகே கற்பள்ளம் கிராமத்தில் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட உதவி பெறும் துவக்க பள்ளியை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கற்பள்ளம் கிராமத்தில் ராஜா உதவிபெறும் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்பொழுது 80 மாணவர்கள் உள்ளனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1954ம் ஆண்டு கற்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இஸ்ரேல் என்பவர் தனது சொந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் துவக்கி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளி முறையாக கல்வித்துறையிடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. விளையாட்டு திடலுக்காகவும், பள்ளி கட்டிடம் கூடுதலாக கட்டிக்கொள்வதற்காகவும், மேலும் கால் ஏக்கர் நிலம் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசிடம் முறையாக ஒபப்டைக்கப்பட்ட இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

கடந்த 5 வருடங்களாக இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கு சொந்தமான சேவைமைய கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாகவும் முறையாகவும் நடைபெற்று வரும் இந்த பள்ளி 80 மாணவர்களை பெற்றிருந்தும் இரண்டே ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். கிராமமக்கள் சார்பில் பல முறை கல்வி துறைக்கு கோரிக்கை விடுத்தும் பழைய பள்ளிக்கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டவோ, பள்ளியை மேம்படுத்தவோ இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பள்ளிக்கு புதிய வகுப்பறைக்கு கட்டிடம் கட்டி கூடுதலான ஆசிரியர்களை நியமித்தால் மேலும் இக்கிராமத்தில் உள்ள இந்த பள்ளி மேன்மையடையும். மாணவர்களும் இக்கிராமத்திலேயே கல்வி பயில ஏதுவாக இருக்கும் எனவே உடனடியாக இப்பள்ளியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கற்பள்ளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : activists ,aid school ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...