×

காரைக்காலில் அரசு தொடக்க பள்ளியில் நெல் அறுவடை திருவிழா

காரைக்கால், பிப்.13: காரைக்கால் அகளங்கண்ணு கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சிறார்கள் பங்கேற்ற நெல் அறுவடை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதன் மூலம் விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகளங்கண்ணு அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் மல்லிகா தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள் பால தண்டாயுதபாணி, சுகந்தி, பூவிழி, கலையரசி, முத்தரசி, ஊழியர் விமலா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அறுவடை திருவிழா குறித்து, பள்ளி தலைமையாசிரியர் மல்லிகா கூறியது: பல மாநிலங்களில் பிரதான உணவாக அரிசி உள்ளது. இந்த அரிசி எங்கிருந்து கிடைக்கிறது? அதற்காக விவசாயிகள் எவ்வாறு கஷ்டப்படுகின்றனர் என்பதை பள்ளி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? என்ற பொன்மொழிக்கு ஏற்ப, மாணவர்களை தயார் படுத்துவது மிக அவசியம். அதனால்தான், ஆசிரியர்களின் முயற்சியால், மாணவர்களுக்கு விவசாயம் குறித்து இது போன்ற விழிப்புணர்வு நெல் அறுவடை விழா நடத்தப்படுகிறது.

இதற்காக, பள்ளி வளாகத்தில் உள்ள சிறிய நிலப்பரப்பில் ஆசிரியர்கள் கண்காணிப்பில், மாணவர்கள் பங்கேற்புடன் நெல், பருத்தி, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆடுதுறை 46 நெல் ரகம் பயிரிடப்பட்டிருந்தது. களையெடுத்தல், உரமிடும் முறை, இயற்கை உரமிடுதலின் நன்மைகள் உள்ளிட்டவை குறித்து தினந்தோறும் பாட நேரத்தோடு இதையும் சொல்லிவருகிறோம். பயிர்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டது. அப்போது, நெல் அறுவடை செய்யும் முறை, கதிரடிப்பு முறை மற்றும் அறுவடைக்கு பிறகு நெல் தனியாகவும், வைக்கோல் தனியாகவும் பிரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டி வருகின்றனர். இது அவர்களின் எதிர்காலத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும். என்றார்.

விவசாயம் குறித்து  மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பல முறை கல்வி துறைக்கு கோரிக்கை விடுத்தும் பழைய பள்ளிக்கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டவோ, பள்ளியை மேம்படுத்தவோ இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பள்ளிக்கு புதிய வகுப்பறைக்கு கட்டிடம் கட்டி கூடுதலான ஆசிரியர்களை நியமித்தால் மேலும் இக்கிராமத்தில் உள்ள இந்த பள்ளி மேன்மையடையும்.

Tags : Paddy Harvest Festival ,Karaikal ,Government Primary School ,
× RELATED காரைக்காலில் வெளிநாடுகளிலிருந்து...