அரசு ஊழியர் அல்லாத நிலஅளவையர் திட்டத்தின் கீழ் சிவில் டிப்ளமோ முடித்தவர்களை நிலஅளவை பணிக்கு பயன்படுத்த அரசு உத்தரவு

வேலூர், பிப்.12: வருவாய்த்துறையில் தேங்கி கிடக்கும் நில அளவை பணிகள் தங்குதடையின்றி நடக்க சிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 3 மாத சிறப்பு பயிற்சியுடன் உரிமம் வழங்கி பயன்படுத்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் சர்வேயர் என்ற நிலஅளவையர் பணியிடங்கள் ஓய்வு, பணியின்போது மரணம் உட்பட பல்வேறு காரணங்களாக ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளது. இப்பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் நிரப்பப்படாததால் பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுகின்றனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாக்களில் நிலஅளவை பணிகளில் தேக்கநிலை காணப்படுகிறது. அதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இப்பிரச்னை நீடித்து வருகிறது. அதற்கேற்ப தகுதிவாய்ந்த சர்வே படிப்பை முடித்தவர்கள் இல்லாததும் இப்பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அரசு ஊழியர் அல்லாத நிலஅளவையர் திட்டத்தின் கீழ் சிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு நிலஅளவையர் பயிற்சி மையத்தில் மூன்று மாதகால சிறப்பு பயிற்சி வழங்கி பயன்படுத்திக் கொள்ள அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இப்பயிற்சி முடித்தவர்களுக்கு நிலஅளவையருக்கான லைசென்ஸ் வழங்கப்படும். அவர்கள் அரசு ஊழியராக கருதப்படமாட்டார்கள். இவர்களை கொண்டு நிலஅளவை பணிகள் முடிக்கப்படும். அவர்கள் செய்யும் பணிக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும். அதன்படி, வரும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 100 பேர் கொண்ட முதல் அணிக்கு ஒரத்தநாடு நிலஅளவையர் பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்களை அரசு இணையதளத்தில் சென்று டவுன்லோடு செய்து வரும் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1.02.2020ம் தேதி நிலவரப்படி 50 வயதுக்கு உட்பட்டவராகவும், 10ம் வகுப்பு தேர்வை தமிழை முதல்பாடமாக கொண்டு படித்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ‘முதல்வர், இணை இயக்குனர், சர்வே டிரையினிங் இன்ஸ்டிடியூட், ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ₹30 ஆயிரம் கட்டணத்தை மையத்தில் செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர்ந்ததும் 2 மாதங்கள் மையத்தில் பயிற்சியும், கடைசி ஒரு மாதம் பல்வேறு மாவட்டங்களுக்கு பயிற்சியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு நேரடி களபயிற்சியும் வழங்கப்படும். தொடர்ந்து அவர்களுக்கு சான்றிதழுடன், சர்வேயர் லைசென்சும் வழங்கப்படும். இந்த உரிமத்தை பெற்றவர்களை கொண்டு மாநிலம் முழுவதும் வருவாய்த்துறையில் தேங்கி கிடக்கும் நிலஅளவை பணிகளை முடிக்கவும், தொடர்ந்து நிலஅளவை பணிகளை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: