கடையம் அருகே சிவசைலத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்

கடையம், பிப்.12: கடையம் அருகே நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில்  சிவசைலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கடையம் அருகே சிவசைலம் கிராமம் புதுக்குடியிருப்பில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கடனா நதி அணை அரசபத்து காலுக்கு பாத்தியப்பட்ட 1300 ஏக்கர் மற்றும் நீலமேகபுரம், சம்பன்குளம், அழகப்பபுரம், சிவசைலம், கல்யாணிபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு மற்றும் பங்களா குடியிருப்பு உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள சுமார் 700 ஏக்கரில் விளையும் நெல்லை விவசாயிகள் இங்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பிசான பருவத்திற்கு நாற்று நடப்பட்டன. தற்போது சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. ஆனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படாததால் நெற்பயிர்கள் முருகி வயலில் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

75 கிலோ நெல் மூடை வெளிசந்தையில் ரூ.900க்கும் அரசின் கொள்முதல் நிலையத்தில் 75 கிலோ மூடை ரூ.1425 வரை விற்பனையாகிறது. எனவே விவசாயிகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை நம்பி உள்ளனர்.

இதனிடையே அரசின் நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசபத்து நீர் பாசன கமிட்டி தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் கொள்முதல் நிலையத்தை விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டத்தில் விவசாயிகள் ராமசந்திரன், குணசேகரன், பாலசுப்பிரமணியன், குருசாமி, சண்முகவேல், தனலட்சுமி, வேலம்மாள், சண்முகவடிவு, கிருஷ்ணன், கண்ணன், சேகர், அரிராம்சேட் உள்பட பலர் பங்கேற்றனர். அரசின் நெல்கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இந்த கட்டிடம் அரசபத்து நீர் பாசன கமிட்டி சார்பில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: