ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கிளை தொடக்க விழா

தென்காசி, பிப்.12: தென்காசியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் தென்காசி மாவட்ட சங்கம் மற்றும் தென்காசி கிளை சங்கம் தொடக்க விழா நடந்தது. சங்கத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர்கள் துரைதம்புராஜ், லிங்கராஜ் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ராமசாமி வரவேற்றார். செங்கோட்டை துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் தொகுத்து வழங்கினார். பொருளாளர் செண்பககுற்றாலம், நல்லாசிரியர் கணேசமூர்த்தி வாழ்த்தி பேசினர். விழாவில் போக்குவரத்து முதன்மை செயலாளரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் சங்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், ‘தென்காசி தனி மாவட்டம் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதன் மூலம்  அரசு அலுவலர்களும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களும் திருநெல்வேலிக்கு சென்று  அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை மாறியுள்ளது.  தென்காசியில் தற்போது  புதிதாக உதயமாகி உள்ள தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம்  தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும்.  

 போக்குவரத்து துறையில் 60 வயதை  கடந்தவர்கள் தங்களது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வந்தால் அவர்களுக்கு  முன்னுரிமை வழங்கப்படும்.  இவ்வாறு அவர்  பேசினார். கூட்டத்தில் போக்குவரத்து இணை ஆணையர் வெங்கட்ராமன், தொழிலதிபர் இசக்கிமுத்தையா, ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர் நாராயணன், ஓய்வுபெற்ற அரசு சித்தா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் கனிராஜ், மீரான் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் அப்துல்அஜீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்புசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், சங்கரன் வாத்தியார், பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓய்வுபெற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.

Related Stories: