×

திருச்சியில் வீட்டு முன் நிறுத்தியிருந்து மாயமான கார் ஜிபிஎஸ் மூலம் கன்னியாகுமரியில் மீட்பு

திருச்சி, பிப்.12: திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்பிரபு(35). இவர் கடந்த 9ம் தேதி இரவு வீட்டு முன் காரை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த காரை காணவில்லை. மேலும் இவரது காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி இருந்ததால் செல்போன் மூலம் ஆய்வு செய்தார். அப்போது கார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்தார். கன்டோன்மென்ட் போலீசார், இது குறித்து கன்னியாகுமரி போலீசாரை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்து அந்த காரை பிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட பேட்ரோல் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர்.

அதை தொடர்ந்து வெங்கட்பிரபு, செல்போன் மூலம் ஜிபிஎஸ் கொண்டு காரை கண்காணித்து வந்தார். இதில் கார் கன்னியாகுமரி மாவட்டம் பவித்திரவிளை அருகே சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி பேட்ரோல் போலீசுக்கு தகவல் அளித்து தயாராக இருக்கும்படி கூறினர். இதற்கிடையில், செல்போன் ஜிபிஎஸ் மூலம் காரின் இயக்கத்தை வெங்கட்பிரபு திடீரென நிறுத்தினார். இதில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென நிறுத்தப்பட்டதால் காரை ஓட்டி சென்றவர் கலக்கமடைந்தார். இந்நிலையில் பவித்திரவிளை பேட்ரோல் போலீசார் சம்பவயிடம் சென்றபோது, போலீசாரை கண்டதும் காரை ஓட்டி சென்றவர் அங்கிருந்து தப்பியோடினார்.

அவரை பிடிக்க முடியாததால் காரை மட்டும் எடுத்து காவல்நிலையம் சென்றனர். தொடர்ந்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிபிஎஸ் மூலம் காரை மீட்ட சம்பவம் சினிமா காட்சி போல் நடந்தது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kanyakumari ,Trichy ,house ,
× RELATED கோயம்பேட்டில் சுற்றித்திரிந்த...