வாகனம் மோதி டிரைவர் பலியான சம்பவம் சாலையை சீரமைக்க கோரி மறியல்

மேச்சேரி, பிப்.12: வாகனம் மோதி டிரைவர் பலியான சம்பவத்தில் சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மேச்சேரியில் மேட்டூர், தொப்பூர் வரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான கனரக வாகனம், இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சாலையை சரியாக பராமரிக்காததால் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேச்சேரி அருகே திமிரிகோட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் பெரியசாமி (33), மேச்சேரிக்கு சென்று விட்டு இரவு டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சீராமணியூர் என்ற இடம் வந்தபோது பள்ளம் இருந்ததால் சற்று ஒதுங்கி வாகனத்தை இயக்கி உள்ளார்.

Advertising
Advertising

அப்போது, பின்னால் வந்த வாகனம் மோதி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை மேச்சேரி காவல் நிலையம் வந்தனர். அப்போது அதே பகுதியில் மீண்டும் தர்மபுரியில் இருந்து வந்த கார் விபத்துக்குள்ளானது. இதனால், மேலும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்தத மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதிகாரிகளிடம் பேசி விரைவில் சாலையை சீரமைக்க உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: