தலைவாசலில் வேளாண்மை கண்காட்சி நிறைவு 3 நாட்களில் 5 லட்சம் பேர் கண்டுகளிப்பு

ஆத்தூர், பிப்.12: தலைவாசலில் நடந்த வேளாண் கண்காட்சியை 3வது நாளான நேற்று பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்ததாக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரியேரி கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ₹1000 கோடி மதிப்பில் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்க கடந்த 9ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வேளாண் கால்நடை, மீன் வளம், பால் வளம், வேளாண் பொறியியல் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் தனியார் பங்களிப்புடன் மாபெரும் வேளாண் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று கண்காட்சி நிறைவு விழா நடந்தது. இதில் தமிழக கால்நடை மற்றும் பால் வள துறை செயலாளர் டாக்டர் கோபால் தலைமை தாங்கினார்.சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வரவேற்றார். இதில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டு கண்காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைத்திருந்த நிறுவனங்களுக்கும், அரசு துறையினருக்கும் கேடயங்கள் வழங்கி பேசினார். தொடர்ந்து கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடை பூங்கா கால்கோள் விழா மற்றும் கண்காட்சியை சிறப்பாக நடத்த உழைத்த அனைத்து துறை செயலாளர்கள், இயக்குனர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:  

தமிழகத்திலேயே விவசாயத்தை நம்பி இருக்கின்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி தனது கனவு திட்டமான தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவினை சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் ஆயிரம் கோடி செலவில் பூஜை செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். முதற்கட்டமாக இந்த ஆண்டு முதலே கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்கிற உத்தரவையும் அவர் அவர்அளித்துள்ளார்.

இந்த கால்நடை பூங்காவில் கால்நடை வளர்ப்பு, தீவன உற்பத்தி, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்ற இருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள கால்நடை மற்றும் பால்வளத் துறை ஆராய்ச்சியாளர்கள் தமிழகத்தில் அமைய உள்ள இந்த கால்நடை பூங்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை துவக்கிய முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமையிலான இந்த அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான செயல்பாடுகளால் மத்திய அரசின் விருதுகளை பெற்று சாதனைகளை புரிந்து வருகிறது.

மேலும் தமிழக வளர்ச்சியின் அடிப்படையில் 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு மீண்டும் அமையும் என்றார். மேலும் இறுதி நாளில் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 5 லட்சத்திற்கு மேல் கண்காட்சியை கண்டு களித்துள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பி, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன், சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி, பெரிய ஏரி ஊராட்சி மன்ற தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: