×

அதிக பனிப்பொழிவால் தைலம் காய்ச்சும் தொழில் பாதிப்பு

ஊட்டி, பிப். 12: நீலகிரியில் பனி பொழிவின் காரணமாக யூகாலிப்டஸ் மரங்களில் உள்ள இலைகள் காய்ந்துள்ளதால் யூகாலிப்டஸ் தைலம் காய்ச்சும் தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எரிப்பொருள் தேவைக்காக யூகாலிப்டஸ் மரங்கள், சீகை போன்ற மரங்களை கொண்டு வந்து வைத்தனர். பின், வணிக நோக்கில் வனத்துறையினர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 50 சதவீத்திற்கும் மேற்பட்ட புல்வெளிகளை அழித்து கற்பூர மரங்களை நட்டு வைத்தனர். இந்த மரங்கள் அதிகளவு நீரை  உறிஞ்சிக் கொள்வதாலும், அதே சமயம் இச்சோலைகள் உள்ள இடங்களில் வேறு எந்த தாவரங்களும் வளராத நிலையில், தற்போது இவைகளை அழிக்க வனத்துறை நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது. அதே சமயம், இந்த கற்பூர மரங்களை நம்பி நீலகிரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தொழிலாளர்கள் நாள் தோறும் வனங்களில் சென்று கற்பூர மர இலைகளை சேகரித்து, தைலம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் கொடுத்து பணம் பெற்றுச் செல்கின்றனர்.

மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தைலம் காய்ச்சும் தொழிலில் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தனியார் நிலங்கள் மற்றும் வனத்துறை இடத்தில் உள்ள கற்பூர மரங்களை அகற்றி வரும் நிலையில், இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வனத்திற்குள் செல்ல வனத்துறையினர் கெடுபிடி அதிகரித்துள்ளதால், உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.  இந்நிலையில், அக்டோபர் மாதம் முதல் நீலகிரியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கற்பூர மரங்களில் இலைகள் அதிகளவு காணப்படுவதில்லை. மேலும், ஒரு சில மரங்களில் இலைகள் காணப்பட்டாலும், அதிலிருந்து வழக்கமாக கிடைக்கும் தைலம் கிடைப்பதில்லை.

இதனால், யூகாலிப்டஸ் தைலம் காய்ச்சும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், ஓரிரு மாதங்களில் யூகாலிப்டஸ் தைலம் உற்பத்தி கடுமையாக பாதிக்க கூடும். மேலும், போலிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, சீனா யூகாலிப்டஸ் தைலம் தற்போது மார்க்கெட்டில் அதிகரித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதிய யூகாலிப்டஸ் இலைகள் கிடைக்காததால், தைலம் காய்ச்சும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Tags :
× RELATED ஹெட்போனால் காது கேட்கும் திறன் பாதிப்பு