×

ஊட்டியில் சிலிண்டர் விநியோக உரிமை தனியாருக்கு மாற்றியதால் மக்கள் அதிருப்தி

ஊட்டி, பிப். 12:ஊட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகத்தின் வசம் இருந்த சிலிண்டர் விநியோக உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மத்திய அரசு திட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு நிறுவனம் சிலிண்டர் விநியோகம் செய்யும் வகையில் கடந்த 1988ம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுபாட்டின் கீழ் (சிவில் சப்ளை) நீலகிரி மாவட்டம் ஊட்டி கூட்செட் பகுதியில் சிலிண்டர் குடோன் மற்றும் அலுவலகம் துவக்கப்பட்டது. 2200 எரிவாயு நுகர்வோர்களுடன் துவக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக அரசு மூலமாக பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 22 ஆயிரம் எரிவாயு நுகர்வோர்கள் உள்ளனர். இதன் மூலம் ஊட்டி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 900 சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

முன்பதிவு செய்யும் நுகர்வோர்களுக்கு, முறையாக தகவல் தெரிவித்து முறையாக தகவல் தெரிவித்து தாமதமின்றி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அரசு நிறுவனமே சிலிண்டர் விநியோகம் செய்யும் திட்டத்தை முறையாக புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என கூறி சிவில் சப்ளை வசம் இருந்த சிலிண்டர் விநியோக உாிமை கடந்த வாரத்தில் இருந்து தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவில் சப்ளையில் 22 ஆயிரம் நுகர்வோர்கள் உள்ள நிலையில், இரண்டாக பிரிக்கப்பட்டு ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாட்டில் ஒரு தனியார் ஏஜென்சிக்கும், தூனேரி கிராமத்தில் ஒரு ஏஜென்சிக்கும் சிலிண்டர் விநியோக உரிமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவில் சப்ளையில் அலுவலகம் மற்றும் குடோனில் பணியாற்றி வந்த பணியாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். கிராமம் தோறும் சென்று சிலிண்டர் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த தற்காலிக ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

சிவில் சப்ளை சிலிண்டர் விநியோக உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தகவலால் நுகர்வோர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இனி சிலிண்டர் விநியோகம் முறையாக இருக்குமா என பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
 நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இதேபோல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சிவில் சப்ளை மூலம் சிலிண்டர் விநியோகம் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக கூறி தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் சிலிண்டர் விநியோகம் முைறயாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது,’’ என்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், ‘‘சிவில் சப்ளை துவக்கப்பட்ட போது 2200 நுகர்வோர்கள் இருந்தனர். கடந்த 32 ஆண்டுகளில் 22 ஆயிரம் நுகர்வோர்களாக உயர்ந்துள்ளது. சிவில் சப்ைளயின் 22 ஆயிரம் நுகர்வோர்களை தனியாருக்கு மாற்றியுள்ளது ஏற்புடையது அல்ல. எனவே மாவட்ட நிர்வாகம் தலையீட்டு சிலிண்டர் விநியோக முறையை மீண்டும் சிவில் சப்ளைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Ooty ,
× RELATED பிறந்தநாள்... இன்று பிறந்தநாள் மக்களை...