நெடுஞ்சாலை ரோடு விரிவாக்கத்திற்காக அரசு கட்டிடங்கள் இடிப்பு

பொள்ளாச்சி,  பிப்.12: பொள்ளாச்சி நகர் வழியாக கோவை, திருப்பூர், பழனி மற்றும்  தென்மாவட்டங்களுக்கும், கேரள மாநில பகுதிக்கும் வாகன போக்குவரத்து  அதிகளவில் உள்ளன. மேலும், நகரில் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்களின்  போக்குவரத்து நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி  ஏற்படுகிறது. இதில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த,  நகர் பகுதி ரோடுகளை விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை  எடுக்கப்பட்டது.  இதில் வாகன போக்குவரத்து மிகுந்த, காந்தி சிலை மற்றும்  மத்திய பஸ் நிலைய பகுதி, நியூஸ்கீம்ரோடு-பல்லடம் ரோடு சந்திப்பிலிருந்து  உடுமலைரோடு மின்நகர் வரையிலும். மரப்பேட்டை பாலத்திலிருந்து தலைமை தபால்  நிலையம் வழியாக பஸ் நிலையம் வரையிலும் உள்ள ரோட்டை விரிவுப்படுத்த 5  ஆண்டுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 3 ஆண்டுக்கு  முன்பு, ரோடு விரிவாக்கத்திற்கு தேவையான அரசு மற்றும் தனியார் நிலங்களை  கையகப்படுத்த, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது,  ரோடு விரிவுபடுத்த சாலை அருகே இருந்த வணிக வளாகம் மற்றும் வீடுகள்,  காலிமனையிடம், அரசு நிலம் உள்ளிட்ட நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டது. இதையடுத்து,  தனியார் நிலம் கையகப்படுத்துவது குறித்து, அந்தந்த நில உரிமையாளர்களிடம்  கருத்துகேட்பு மற்றும் ஆட்சேபனை ஆலோசனை கூட்டம் அவ்வப்போது நடந்தது.   இந்த  நிலையில், கையகப்படுத்தப்பட்ட தனியார் இடத்துக்கான இழப்பீட்டுதொகை மொத்தம்  ரூ.33.70 கோடியின் ஒரு பகுதி தொகையை பிரித்து, உரிய நபர்களுக்கு  வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த மாதம், உடுமலைரோட்டில்  கையகப்படுத்தப்பட்ட தனியார் கடைகளை இடிக்கும் பணி துவங்கப்பட்டது. ரோடு விரிவாக்கத்திற்காக தலைமை தபால் நிலையம், வருவாய்துறை,  அரசு மருத்துவமனைக்குட்பட்ட ஒரு பகுதி கட்டிடங்கள் என பெரும்பாலும்  அரசுத்துறைக்குட்பட்ட கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட  பொறியாளர் விஜயகுமார் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி நகரில் பல்லடம் ரோடு -  நியூஸ்கீம்ரோடு சந்திப்பு மற்றும் காந்திசிலை, புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட  பகுதியிலிருந்து உடுலைரோடு மின்நகர் வரையிலும் உள்ள நெடுஞ்சாலையை  விரிவாக்கம் செய்வதற்கு, அரசு மற்றும் தனியார் நிலம் கையகப்படுத்தும் பணி  நடக்கிறது. தற்போது இழப்பீடு வழங்கப்பட்ட தனியார் நிலத்தை கையகப்படுத்தும்  பணி நடக்கிறது. அரசு மற்றும் தனியார் நிலத்திற்கான இழப்பீடு தொகை  ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு நிலத்திற்குண்டான இழப்பீடு தொகை,  வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகிறது. கையகப்படுத்தப்படும் ரோட்டோரம் உள்ள  அரசு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வந்தாலும், விரைவில் அந்தந்த துறைக்கு உரிய  இழப்பீடு தொகை சென்றுவிடும், அதில் எந்த மாற்றமும் இருக்காது. இதையடுத்து  ரோடு விரிவாக்க பணியை துரிதப்படுத்தப்படுகிறது’’ என்றார்.

Related Stories: