அமராவதி வனத்தில் வறட்சி மூணாறு ரோட்டில் நிற்கும் யானை கூட்டம்

உடுமலை,பிப்.12:அமராவதி வனத்தில் வறட்சி காரணமாக, யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுக்க துவங்கி உள்ளன. இதனால் மூணார் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பாக பயணிக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்தாலும், அக்டோபரில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதனால் வனத்தில் நீர் நிலைகள் வறண்டன. புற்களும் பசுமை இழந்து காணப்படுகின்றன. டிசம்பர் முதல் கடந்த 2 மாதங்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் செடி, கொடிகள் காய்ந்து வறட்சி ஏற்பட்டது.

Advertising
Advertising

இன்னும் 3 மாதங்களுக்கு கோடை வெயில் வாட்டி எடுக்கும் என்பதால், இப்போதே வன விலங்குகள் தண்ணீருக்காக அலைபாய துவங்கிவிட்டன. உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்டுக்கும், சின்னாறுக்கும் இடையே காட்டு யானைகள் சாலையை கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க செல்கின்றன. வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில்தான் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுப்பது வழக்கம்.

ஆனால் தற்போது, பிப்ரவரி துவக்கத்திலேயே யானைக்கூட்டம் அணைக்கு செல்கிறது. கடந்த சில தினங்களாக குட்டிகளுடன் சேர்த்து 50க்கும் மேற்பட்ட யானைகள் அணையில் தண்ணீர் குடிப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

அமராவதி அணையில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் இதை தங்கள் செல்போன்களில் படம் பிடிக்கின்றனர். யானைகளுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது, வாகனத்தில் செல்வோர், அமைதியாக இருந்தால், யானைகள் சிறிது நேரத்தில் தானாகவே வனத்துக்குள் சென்றுவிடும். குறிப்பாக செல்பி எடுக்க முயற்சிக்கவோ, வாகன ஹாரனை அழுத்தி யானையை கோபமூட்டவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: