நகரில் அனுமதியின்றி இயங்கும் பைக் டாக்சி விதிமீறல் அதிகரிப்பு

கோவை, பிப். 12: நகரில் அனுமதியின்றி பைக் டாக்ஸி இயக்கம் அதிகரித்து வருகிறது. விதிமீறலும் தொடர்கிறது. இந்தியாவின் பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்டவைகளில் பைக் டாக்ஸிகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகின்றன. பயண கட்டணம் குறைவால் மக்கள் அதிகமாக இந்த சேவையை நாடி வருகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்கள் பல பைக் டாக்ஸி சேவையை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அறிமுகம் செய்தது. ஆனால் தமிழக அரசு பைக் டாக்ஸிக்கு அனுமதி அளிக்கவில்லை. இருந்தபோதும் தமிழகம் முழுவதும் பைக் டாக்ஸிக்கள் இயங்கி வருகிறது. கோவையில் கடந்த ஆண்டு இந்த சேவையை தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முழுவதும் செல்போன் செயலி மூலம் இயங்கும் இதில், ஏற்றி செல்லும் இடம், இறங்கும் இடத்தை பதிவு செய்தால் அந்த இடத்துக்கே வந்து அழைத்துச் செல்கிறது. மேலும் 3 முதல் 5 கிலோ மீட்டருக்கு பயண கட்டணம் ரூ.10 முதல் ரூ.15 மட்டுமே வசூலிப்பதால் இதில் பயணிக்க கோவை மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரி செலுத்தி இயக்கி வரும் வாடகை ஆட்டோ ஓட்டுனர்கள் இதற்கு கடுமையாக எதிர்த்து தெரிவித்து வந்தனர். ஒரு சில இடங்களில் பைக் டாக்ஸிகளை பிடித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள்  கூறியதாவது: மத்திய, மாநில மோட்டார் வாகனச் சட்டங்களின்படி, இருசக்கர  வாகனத்தை வாடகைக்கு இயக்க அனுமதி இல்லை. தற்போது அனுமதி இல்லாமல்தான்  செல்போன் செயலி மூலம் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்கி வருகின்றனர்.  வாடகைக்கு வாகனத்தை இயக்க வேண்டுமெனில், ஆண்டுக்கு ஒருமுறை வாகனத் தகுதி  சான்று பெற வேண்டும். வாடகை வாகனத்துக்கான காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்த  வேண்டும். மேலும், வாடகை வாகனத்தை இயக்குவதற்கென தனியே ஓட்டுநர் உரிமம் பெற  வேண்டும். ஆனால், வாடகைக்கு இருசக்கர வாகனங்களை இயக்குபவர்கள் சீருடை  அணிவதில்லை. பின்புறம், அமருபவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை. மாணவர்கள்  மற்றும் அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்கள் ஆகியோர் இந்த வாகனங்களை  இயக்குகின்றனர். இதனால், பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

இருசக்கர  வாகனத்தை,  டாக்ஸியாக இயக்க வேண்டுமெனில்,  தமிழ்நாடு மோட்டார் வாகனச்  சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும். அவ்வாறு திருத்தங்களை செய்தால்  மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசிடம் மனு  அளிக்க வேண்டும். சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனத்தை, வாடகைக்காக  பயன்படுத்தப்படும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்தில்  பயணிப்பவர்களுக்கு விபத்துக்கான இழப்பீடு கிடைக்காது. சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்காக இயக்கினால், ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம்  வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், வாகன தகுதிச்  சான்று (எஃப்.சி.), மாசு கட்டுப்பாட்டு சான்று (பியுசி) ஆகியவை இருக்கிறதா?  என்பதையும் ஆய்வு செய்கிறோம். இதில், எஃப்.சி. இல்லையெனில் ரூ.500, பியுசி  இல்லையெனில் ரூ.1,000, வாகனக் காப்பீடு இல்லையெனில் ரூ.500 அபராதமாக  விதிக்கப்படுகிறது. எனவே, சொந்த பயன்பாட்டுக்கான  இருசக்கர வாகனத்தை வாடகைக்காக இயக்குபவர்கள் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: