தண்ணீர் பந்தல் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது

கோவை, பிப்.12:  கோவை தண்ணீர் பந்தல் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவை அவினாசி சாலை ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து தண்ணீர் பந்தல், விளாங்குறிச்சி வழியாக சரவணம்பட்டி சென்றடையும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் நாள்தோறும் 38 முறை மூடப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் ரயில்வே கேட் அருகே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து தண்ணீர்பந்தல் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பணி மந்த கதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து மகேஸ்வரி நகர் வரை மேம்பாலம் அமைக்க சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது. இதற்காக நெடுஞ்சாலை துறையினர் நபார்டு திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் உள்ள 30க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் நிலம் கையகப்படுத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான, ஆலோசனை கூட்டம் ஹோப் காலேஜ் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், தற்போது உள்ள சாலையை தவிர்த்து சாலையின் இரு புறமும் 12 அடி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரயில்வே பாலத்தில் இருந்து தெற்கே 280 மீட்டர், ரயில் பாலத்தின் வடக்கு பகுதியில் 350 மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கு நில உரிமையாளர்களுக்கு சதுரடிக்கு ரூபாய் 4 ஆயிரம் வரை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டனர். இதற்கு பொதுமக்கள் ஒரு சதுரடிக்கு ரூ.4 ஆயிரம் என்பது குறைவு எனவும், ரூ.6 ஆயிரம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், நுகர்வோர் அமைப்பினர் மேம்பாலத்தை தண்ணீர் பந்தலில் உள்ள குறுகிய வளைவு வரை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ரயில்வே மேம்பால பணிகள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: