விருத்தாசலத்தில் செல்லியம்மன் கோயில் செடல் திருவிழா

விருத்தாசலம், பிப். 12: விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தைமாதம் செடல்திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். அப்போது கடலூர் மாவட்டத்திலேயே பெரிய அளவில் ராட்சத அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் நேர்த்திகடன் செய்வது வழக்கம். அதுபோல இந்த வருடம் நடைபெற்ற திருவிழாவுக்கு கடந்த 4ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் காப்புகட்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த செடல் திருவிழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மாப்பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

Advertising
Advertising

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்  மணிமுக்தாற்றுக்கு சென்று சக்தி கரகம் மற்றும் பால்குடங்களுக்கு வழிபாடுகள் செய்த பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து  செல்லியம்மன் கோயிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து கம்பிஅலகுகள், செடல் அலகுகள், விமானஅலகுகள், நாக்கலகுகள் உள்ளிட்ட அலகுகள் போட்டுக்கொண்டு, அறுகண்டன் காவடி அணிந்தும், பறக்கும் காவடியில் 2 வாகனங்களில் பக்தர்கள் செல்லியம்மன், சிவன், பார்வதி வேடம் அணிந்தும் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி சன்னதிவீதி, பாலக்கரை, கடலூர் சாலை வழியாக ஊர்வலம் வந்தனர். கோயிலை வலம் வந்து பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தின் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அம்மன் சிறப்பலங்காரத்தில் அருள்பாலித்து மகா தீபாராதனைகளுடன், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: