பெட்ரோல் பங்க் மேலாளர் கொலையில் ரவுடி அசாரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

விழுப்புரம், பிப். 12: பெட்ரோல் பங்க் மேலாளர் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி அசாரிடம் 4நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த விழுப்புரம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. விழுப்புரம் கிழக்குபாண்டிரோடு திருநகரில் பிரகாஷ் என்பவருக்குச்சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதில், விழுப்புரம் ஆனந்தம்நகரை சேர்ந்த சீனுவாசன்(56) என்பவர் மேலாளராக வேலை செய்துவந்தார். கடந்த 4ம் தேதி  வேலைக்குசென்றபோது, விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம்காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி அசார் தனது கூட்டாளிகள் உதவியுடன்   வெடிகுண்டுவீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தார்.

Advertising
Advertising

இதுகுறித்து ஊழியர் பாலு அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார்  கொலை வழக்கு  பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். ஏற்கனவே மாமூல்கேட்டு கொடுக்காததால், பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரகாஷை, அச்சுறுத்துவதற்காக  மேலாளர் சீனுவாசனை  கொலை செய்துவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, தலைமறைவாக உள்ள அசார் அவரது கூட்டாளிகளை  போலீசார் தேடிவந்த நிலையில், கடந்த 5ம் தேதி முக்கிய குற்றவாளியான அசார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத்தொடர்ந்து இக்கொலைவழக்கில் தொடர்புடைய மற்றொரு ரவுடியான விழுப்புரத்தைச் சேர்ந்த அப்பு 6ம் தேதி  தாம்பரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அப்புவை நான்கு நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முக்கிய  குற்றவாளியான அசாரை போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாலுகா போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். 10 நாட்கள் போலீஸ்  காவலில் விசாரிக்க அனுமதிக்கும்படி  கேட்டுக்கொண்டனர். மாலையில் இம்மனு  விசாரணைக்கு வந்தநிலையில்,  திருச்சியிலிருந்து அசார் பலத்தபோலீஸ்  பாதுகாப்புடன் விழுப்புரம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை  விசாரித்த நீதிபதி 4 நாட்கள்  போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார்.

மேலும், வரும் 14ம் தேதி மாலைக்குள்  மீண்டும் அவரை ஆஜர்படுத்தவேண்டுமென நீதிபதி  உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து,  தனிப்படை போலீசார் அசாரை, விசாரணைக்காக  ரகசிய இடத்திற்கு  அழைத்துச்சென்றனர். தொடர்ந்து, இக்கொலையில் வேறு யாருக்கு  தொடர்பு  உள்ளது, கொலைக்கான காரணம் என்ன என்று துருவி, துருவி விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: