விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவர்களின் ஒழுக்கமின்மை அதிகரிப்பு

விழுப்புரம், பிப். 12:  விழுப்புரத்தில் சில மாதங்களாக அரசு பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கமின்மை அதிகரித்துள்ளது. இத்தகைய மாணவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.  விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் பழைய கருவாச்சி கிராமம் வரை செல்லும் அரசு பேருந்து வழக்கம்போல் காலையில் சென்றுள்ளது. அய்யம்பாளையம் கிராமத்தில் சுமார்  9.30 மணியளவில் பேருந்து பயணிகள் நிழற்குடையில் இருந்து சற்று தள்ளி நிறுத்தப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேர் திடீரென பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர். இதில் அரசு பேருந்து பின்புற கண்ணாடி முழுவதுமாக உடைந்தது.

சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டார். பின்னர் ஓட்டுனர், மாணவர்களிடம் எதற்காக பேருந்து கண்ணாடியை உடைத்தீர்கள் என்று கேட்டதற்கு மாணவர்கள், ஓட்டுனரிடம் எதற்காக பேருந்தை தள்ளி நிறுத்தினாய் என்று கேட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்த போது இச்செயலில் ஈடுபட்ட மாணவர்கள் 3 பேரும் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் அரசு பேருந்து புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செஞ்சி மார்க்கமாக செல்லும் போது அப்பேருந்தில் பயணித்த அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ. வரலாறு படித்து வரும் காளிதாஸ் மகன் ஈஸ்வர் (18) என்பவரிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு ஈஸ்வர் தன்னிடம் பஸ்பாஸ் உள்ளதாக காட்டியுள்ளார். அவரிடம், நடத்துனர் இது கல்லூரி நாட்களில் மட்டுமே செல்லும் எனவும் விடுமுறை நாட்களில் செல்லாது எனவும் கூறியுள்ளார். அப்போது ஈஸ்வர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடத்துனர், அவரிடம் டிக்கெட் எடுக்கவில்லை என்றால் பேருந்திலிருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வர், அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்தது. இதுகுறித்து பேருந்தின் நடத்துனர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கடந்த மாதம் 27ம் தேதியன்று கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீசார், அவர்களுக்கு நூதன தண்டனையான திருக்குறள் எழுதும் தண்டனையை கொடுத்தனர்.

அதேபோல் விழுப்புரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கீழ்பெரும்பாக்கம் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் அதிகரித்து வரும் மாணவர்களின் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: