கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வெட்டி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி, பிப். 12: அனைத்து விவசாயிகள் முற்போக்கு சங்க தலைவர் ரிஷிவந்தியம் ஷாயின்ஷா தலைமையில் கரும்பு விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தியாகதுருகம் அடுத்த கலையநல்லூரில் இயங்கி வரும் தரணி சர்க்கரை ஆலை 16 மாதங்களாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான பணத்தை வழங்கவில்லை. மேலும் கடந்த அக்டோபர் மாத பருவத்தில் வெட்ட வேண்டிய கரும்புகள் இதுவரையில் வெட்டப்படாமல் உள்ளது. கரும்புகளின் விளைச்சல் முடிந்து தற்போது கரும்புகள் அனைத்தும் காய்ந்து வருகிறது.

Advertising
Advertising

16 மாதங்களுக்கு மேல் கரும்புக்கான பணம் தராததால் வங்கிகள், விவசாயிகளிடம் வட்டியும் முதலும் சேர்த்து வசூலித்து வருகின்றனர். கடன் வாங்கி கட்டாதவர்களுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆலை நிர்வாகம் 16 மாதங்களாக கரும்பு பணம் தராததால் விவசாயிகள் வங்கி கடன் வட்டி கட்டுகின்றனர். இதற்கு ஆலையே பொறுப்பேற்க வேண்டும். 16 மாதங்களாக ஆலையும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் எங்களின் கரும்புகள் அனைத்தும் பாழாகி வருகிறது.

எனவே எங்களது கரும்புகளை அருகாமையில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பவும், வரும் பருவ கரும்புகளை பதியவும், ஆலையில் இருந்து கரும்புக்கான பணத்தை பெற்று தரக்கோரியும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: