விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்

விழுப்புரம்,  பிப். 11: விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியர் அறிவிப்புக்கு பிறகும்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள்  ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் விவசாயிகள் நிறைந்த விழுப்புரம் மாவட்டம்  நெல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவுதானிய  உற்பத்தியிலும் விழுப்புரம் மாவட்டத்தின் பங்குஅதிகளவு உள்ளது. இதனிடையே  சம்பா சாகுபடிக்கு பயிரிட்ட நெல்பயிர்கள் தற்போது அறுவடைக்கு  காத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அதிகளவு  மூட்டைகள் குவிவதும், போதிய இடமில்லாமல் கமிட்டிகளை மூடுவதும் வழக்கமான  ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் இந்த நடவடிக்கையை  கடந்த காலங்களில் காணமுடிந்தது. இதனால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து மத்திய அரசின் குறைந்தபட்ச  ஆதார விலைக்கு நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள்  வலியுறுத்தி வந்தனர்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அதிகளவு  நெல்மூட்டைகள் குவிந்ததால் வியாபாரிகளிடையே சிண்டிகேட் அமைத்து அடிமாட்டு  விலைக்கு நெல் கொள்முதல் செய்யும் நிலையும் ஏற்படும். இதனை தவிர்க்க  நேரடி நெல்கொள்முதல் நிலையம் தேவை என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.  கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும் இது தொடர்பாக  கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் 6  இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியர் அண்ணாதுரை கடந்த மாதம்  29ம் தேதி உத்தரவிட்டிருந்தார். மேலும், விவசாயிகளுக்கு அவர்  தெரிவித்திருந்த அறிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டு  அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை சம்பா பருவத்தில்  பயிரிடப்பட்ட நெல்பயிரில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள பரப்பில் பிப்ரவரி மாதத்தில் அதிகபடியான  சாகுபடி பரப்பில் அறுவடை நடைபெற உள்ளதால் விவசாயிகள் குறைதீர்க்கும்  நாள் கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு அரசு  நிர்ணயித்த குறைந்த பட்ச ஆதார விலையை வழங்கிடும் வகையில் புதிதாக 6 இடங்களில்  நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழ்நாடு அரசு  அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம்  ஆவணிப்பூர், உப்புவேலூர், பனமலைப்பேட்டை, முட்டத்தூர், தீவனூர்,  சித்தலிங்கமடம் ஆகிய இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட  உள்ளன. நேரடி நெல்கொள்

முதல் நிலையங்களில் சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு  நெல்கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில்  சன்னரக நெல்லுக்கு மாநிலஅரசின் ஊக்கத்தொகையுடன் சேர்த்து குவிண்டாலுக்கு  ரூ.1,905 என்ற வீதத்திலும், இதர பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.1,865 என்ற வீதத்திலும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்கொள்முதல்  செய்யப்பட உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை  பயன்படுத்தி தங்களுடைய நெல்லை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை  செய்து கூடுதல் லாபம் பெற்று பயனடைய வேண்டுமென தெரிவித்திருந்தார். ஆனால்,  ஆட்சியர் அறிவித்து 10 நாட்களுக்கு மேலாகியும் ஒரு இடங்களில் கூட  நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, ஒரு மூட்டை நெல் கூட கொள்முதல்  செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இது  தொடர்பாக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன் நேற்று மீண்டும்  ஆட்சியரிடம் ஒரு மனுஅளித்தார். அதில், இன்றுவரை நேரடி நெல்கொள்முதல்  நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 20ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில்,  ஒருவாரகாலத்திற்குள் திறக்கப்படும் எனக்கூறப்பட்டது.  இதுவரைதிறக்கப்படவில்லை. குறித்தநேரத்தில் நெல்கொள்முதல்  செய்யவில்லையென்றால் விவசாயிகள் பயனடைய மாட்டார்கள். இவ்வாறு அந்த  மனுவில்

கூறப்பட்டுள்ளது.

Related Stories: