ஆட்டோவில் கடத்தி சென்ற 500 மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம்,  பிப். 11: புதுவையில் இருந்து ஆட்டோவில் கடத்தி வந்த 500 மதுபாட்டில்களை  போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம்  மத்திய புலனாய்வு பிரிவு ஏட்டு குமரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  நேற்றுமுன்தினம் இரவு விழுப்புரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி  தலைமையில் பழைய பேருந்துநிலையம் பகுதியில் திடீர் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, அதிவேகமாக புதுச்சேரி மார்க்கத்திலிருந்து வந்த ஒரு ஆட்டோவை  நிறுத்தினர். ஆனால், நிற்காமல் சென்றதை தொடர்ந்து போலீசார்  துரத்திச்சென்றனர்.இதற்கிடையே போலீசார் துரத்திச்செல்வதை அறிந்து, ஆட்டோவை  நிறுத்திவிட்டு இரண்டு பெண்கள் தப்பியோடிவிட்டனர். டிரைவரை  மட்டும் மடக்கி பிடித்தனர். பின்னர், ஆட்டோவை சோதனையிட்டபோது அதில்  புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 மதுபாட்டில்கள் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது  விழுப்புரம் அருகே மரகதபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(36) என்பதும்,  ஆட்டோவிலிருந்து தப்பியவர்கள் முகையூரைச் சேர்ந்த மலையரசன் மனைவி பூங்கொடி,  ராஜ் மனைவி எலிசபெத் என்பது தெரியவந்தது. மேலும், திருவெண்ணெய்நல்லூர்  பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்திச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.  இதேபோல், கோலியனூரில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டபோது  புதுச்சேரியில் இருந்து, விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தை  சோதனையிட்டபோது வீரசோழபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தங்கேஸ்வரி(43)  என்பவர் 250 மதுபாட்டில்களை கடத்திவந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து  போலீசார் அவரை கைதுசெய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை  மதுவிலக்கு அமல்பிரிவு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: