×

மதுராந்தகம் அருகே ஈசூர் - வள்ளிபுரம் தடுப்பணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

மதுராந்தகம், ஜன. 29: மதுராந்தகம் அருகே ஈசூர் - வள்ளிபுரம் தடுப்பணையின் உயரத்தை உயர்த்த பொதுப்பணி துறை அதிகாரிகள்,  கலெக்டர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். மதுராந்தகம் அடுத்த ஈசூர் வள்ளிபுரம்  பாலாற்றின் குறுக்கே ₹30 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை மூலமாக அப்பகுதியில் உள்ள ஈசூர், வள்ளிபுரம், புதூர், லட்சுமி நாராயணபுரம், அரசர் கோவில், ஆனூர் ஆகிய பாலாற்றின் இரு கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையொட்டி, அப்பகுதியில் உள்ள விவசாய வயல்களுக்கு போதிய தண்ணீர், ஆழ்துளை கிணறுகள் மூலமாக கிடைத்து வருகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இந்த தடுப்பணையை மேலும் உயர்த்தினால் இப்பகுதி மக்களுக்கு கூடுதலாக பலன் இருக்கும் என அப்பகுதி விவசாயிகள், மதுராந்தகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், பொதுப்பணித்துறை நிர்வாக அலுவலர் சத்யகோபால், காஞ்சிபுரம் கலெக்டர் ஜான்லூயிஸ், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அசோகன், மதுராந்தகம் பொதுப்பணித் துறை அதிகாரி ராதாகிருஷ்ணா, பொறியாளர் தியாகராஜன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்பட பலர் நேற்று இந்த அணையை ஆய்வு செய்தனர். குறிப்பாக தற்போது தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதைவிட கூடுதலாக தண்ணீரை தேக்கி வைக்கும் நோக்கில், ஒன்றரை மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பணையை மேலும் ஒரு மீட்டர் உயரத்திற்கு கட்டுமானங்கள் அமைப்பது குறித்த ஆய்வாக இது அமைந்தது. மேலும், வாயலூர் - கடலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலாற்று தடுப்பணையை நீர்த்தேக்கமாக மாற்றுவதற்காக ஆய்வு செய்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக அவர்கள், மதுராந்தகம் அடுத்த படாளம் பாலாற்றின் குறுக்கே உதயம்பாக்கம் வரை கடந்த 1996ம் ஆண்டு கட்டப்பட்ட தரைப்பாலத்ைத பார்வையிட்டனர். தற்போது, அந்த பாலமானது சேதமடைந்துள்ளது.  அங்கு புதிய பாலம் அமைப்பது குறித்தும், அதே பகுதியில் ஒரு தடுப்பணை அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : inspection ,blockade ,Isur-Vallipuram ,Maduranthanam ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்