மண்டபம் புக் செய்ததில் குளறுபடி ஒரே நேரத்தில் இரு மணமக்களின் உறவினர்கள் திரண்டதால் மோதல்

* தாம்பரம் திருமண விழாவில் பரபரப்பு

* காலி இடத்தில் நடந்தது ஒரு வரவேற்பு

தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம், முத்துலிங்கம் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இதில் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நிகழ்ச்சி நடத்துபவர்கள் முன்பதிவு செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. நிகழ்ச்சி நடத்துபவர்கள் முதலில், சம்பந்தப்பட்ட தேதியில் வேறு யாராவது முன்பதிவு செய்துள்ளனரா என நகராட்சி அலுவலக வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் தெரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட தேதியில் மண்டபம் காலியாக இருந்தால், கேஷ் கவுன்டரில் முன்பணம் செலுத்திவிட்டு, அந்த ரசீது அசல், நிகழ்ச்சியின் அழைப்பிதழ் மற்றும் மணமக்களின் ஆதார் நகல் ஆகியவற்றை வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னரே மண்டபம் புக் செய்தது உறுதியாகும். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் ரசீது நகலை மண்டபத்தை பராமரிப்பவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பணத்தை செலுத்தி விட்டு இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மண்டபம் புக் செய்துள்ளதாக அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் இருக்காது.

இந்நிலையில் முடிச்சூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று (28ம் தேதி) அவர்களது வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், இன்று (29ம் தேதி) காலை திருமண நிகழ்ச்சியும் நடத்துவது எனவும் திட்டமிட்டு கடந்த ஜூலை மாதம், நகராட்சி அலுவலகத்திற்கு வந்து வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் தேதி உள்ளதா என கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் கேட்ட தேதிக்கு மண்டபம் காலியாக உள்ளது என நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், கேஷ் கவுன்டரில் மண்டபத்திற்கான பணத்தை செலுத்தி விட்டு, ரசீது அசல், திருமண அழைப்பிதழ் மற்றும் மணமக்களின் ஆதார் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் பணத்தை செலுத்தி விட்டு, அதற்கான ரசீதை மேல் தளத்தில் உள்ள வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்காமல் சென்றுள்ளனர். இதனால் அவர்கள் மண்டபம் புக் செய்ததாக அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் திருவஞ்சேரி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று (28ம் தேதி) அவர்களது வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்தை புக் செய்ய நகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது, பதிவேட்டை பார்த்தபோது, குறிப்பிட்ட தேதியில் மண்டபத்தை யாரும் புக் செய்யவில்லை, என இருந்தது. இதையடுத்து மண்டபம் காலியாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் மண்டபத்திற்கான பணத்தை செலுத்தி விட்டு, அதற்கான ரசீது அசல், திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழ், மணமக்களின் ஆதார் நகல் ஆகியவற்றை வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி புக் ஆகிவிட்டது என பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்வதற்காக இரண்டு தரப்பினரும் சமையல் பொருட்களை திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்து இறங்கியுள்ளனர். அப்போது தான் இரு தரப்பினருக்கும் விவரமும் தெரியவந்துள்ளது. நான்தான் முதலில் பணம் செலுத்தினேன் என ஒரு தரப்பினரும், நான்தான் முறைப்படி பதிவு செய்துள்ளேன் என மற்றொரு தரப்பினரும் கூற இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அதிகாரிகள், ஒரு தரப்பினர் விதிமுறைகளை பின்பற்றாததே இதற்கு காரணம். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, என தெரிவித்தனர். ஆனால் அதற்கு இருதரப்பினரும் சம்மதிக்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார், இடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, மண்டபத்தை முதலில் புக் செய்தவர் மண்டபத்தின் பின் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஸ்டேஜ் மற்றும் பந்தல்கள் அமைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளவும், இரண்டாவதாக மண்டபத்தை புக் செய்து விதிமுறைகளை பின்பற்றிய தரப்பினருக்கு மண்டபத்தின் உள்பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இரண்டாவதாக மண்டபத்தை புக் செய்து விதிமுறைகளை பின்பற்றிய தரப்பினருக்கு, அவர்கள் செலுத்திய முழு பணத்தையும் நகராட்சி அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட இருதரப்பினரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: