பல்லாவரம் - குன்றத்தூர் பிரதான சாலையில் விதிமீறி உயரமாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் விபத்து அதிகரிப்பு

* ஒளிரும் வர்ணம், எச்சரிக்கை பலகையும் இல்லை

* நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் வழியாக ஸ்ரீபெரும்பதூர், மாங்காடு, பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு பல்லாவரம் - குன்றத்தூர் பிரதான சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பல்லாவரம் முதல் குன்றத்தூர் வரை உள்ள இந்த சாலையில் ஏராளமான வேகத்தடைகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக வேகத்தடைகள் அமைக்கும் போது, மாவட்ட ஆட்சி தலைவரின் அனுமதி பெற்று, குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உயரத்தில் மட்டுமே வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என்பது சாலை விதி. மேலும் வேகத்தடை உள்ளதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும். வேகத்தடை மீது இரவு நேரத்திலும் ஒளிரும் வகையில், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட வேண்டும். இவ்வாறு வேகத்தடைகள் அமைப்பதில் சாலை விதிமுறைகள் பல இருக்க, இது எதையும் பின்பற்றாமல், பல இடங்களில் மிக உயரமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வேகத்தடையில் ஏறி இறங்கும் கார்கள் சேதமடைகின்றன. வேகத்தடை மீது ஒளிரும் வர்ணம், அருகில் எச்சரிக்கை பலகை உள்ளிட்டவை இல்லாததால், இரவில் இவ்வழியே செல்வோர் வேகத்தடை மீது மோதி, விபத்தில் சிக்குகினறனர்.

மேலும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளின் நிலையோ இன்னும் பரிதாபமாக உள்ளது. விபத்துக்களை தடுக்க வேகத்தடைகள் அமைப்பதென்பது வரவேற்கப்பட வேண்டிய விசயம் தான். அவ்வாறு அமைக்கப்படும் வேகத்தடைகளே விபத்து ஏற்பட பெரிதும் காரணமாக அமைகிறது என்பதை நினைவில் கொண்டு, அதற்கேற்றவாறு சரியான அளவில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேகத்தடைகள் உள்ளதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை பதாகைகள் மற்றும் ஒளிரும் வர்ணங்கள் வேகத் தடைகள் மீது பூசி, வேகத் தடைகளால் பெருகி வரும் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: