×

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்: எர்ணாவூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 4வது வட்டத்திற்கு உட்பட்ட எர்ணாவூர் மகாலஷ்மி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து, மணலி விரைவு சாலையை இணைக்கும் மகாலட்சுமி நகர் சாலை, சுமார் 1 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இச்சாலை, கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழை காலத்தில் இந்த சாலை சேறும் சகதியுமாகவும், வெயில் காலத்தில் புழுதி பறந்தும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். அவசர காலங்களில் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்து செல்கின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த சாலை மற்றும் எர்ணாவூர் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுக்கும் போராட்டம் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டலம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் எல்லை அம்மன் கோயில் தெருவில் இருந்து ஊர்வலமாக சென்று திருவொற்றியூர் மண்டல அலுவலரை சந்தித்து சாலையை சீரமைக்க கோரி மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...