×

கிடப்பில் புதிய கட்டிட பணி ரேஷன் பொருள் வாங்குவதற்கு நீண்ட தூரம் அலையும் மக்கள்: தண்டையார்பேட்டையில் அவலம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை கருணாநிதி நகரில் உள்ள பாழடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, வேறு இடத்துக்கு கடை மாற்றப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர், 1வது தெருவில், அடுத்தடுத்து 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு, கருணாநிதி நகர், வினோபா நகர், நெடுஞ்செழியன் நகர், தமிழன் நகர், ராஜசேகரன் நகர், மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வந்தனர்.  

அதாவது, ஒரு கடையில் 1200 கார்டுகளுக்கும், 2வது கடையில் 800 கார்டுகளுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள், சிதிலமடைந்து காணப்பட்டது. சுவரில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்பட்டதால், இந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர், 1வது தெருவில் செயல்பட்ட ரேஷன் கடைகள், கடந்த 2 மாதங்களுக்கு முன், நெடுஞ்செழியன் நகரில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன. இங்கு ஒரே கட்டிடத்தில், 2 கடைகள் செயல்படுவதால், இட நெருக்கடியில் கார்டுதாரர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்த ரேஷன் கடைகள் தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர், 1வது தெருவில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளதால், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. இதனால், பெண்கள், முதியோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பழைய ரேஷன் கடை கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கடைகளை கட்டும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, தண்டையார்பேட்டை கருணாநிதி நகரில் புதிய கட்டிடங்களை கட்டி, மீண்டும் அதே பகுதியில் ரேஷன் கடைகளை செயல்படுத்த வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆர்.கே நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற பிறகு அதிகாரிகள் பல்வேறு திட்டப் பணிகளை செய்து வந்தனர். அவர் மறைந்த பிறகு, தற்போது அந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் உள்ளது. குறிப்பாக, வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறாமல் ஆர்கே நகர் தொகுதி மோசமான நிலையில் உள்ளது, என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags : warehouse ,
× RELATED சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட்...